புத்துயிர் பெறுவார்களா நீலகிரி பூண்டு விவசாயிகள்? - இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் பரிதாபம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி பூண்டின் விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், முட்டை கோஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. அதேபோல, சில விவசாயிகள் பூண்டு விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை முதல் போகத்தில் 2,000 ஏக்கர், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது போகத்தில் 1,000 ஏக்கரில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு, சராசரியாக 20 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி பூண்டு விதைக்கு வட மாநிலங்களில் கிராக்கி உள்ளது. மேட்டுப்பாளையம் மண்டிகளில் மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து பூண்டு வாங்கி செல்கின்றனர்.

தற்போது, நீலகிரி பூண்டு விலை கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. மழையால் பூண்டு பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மகசூல் குறைய வாய்ப்புள்ளதால், விலையும் குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். பூண்டு உட்பட மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், கடந்த 100 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் மண்டிகளில்தான் ஏலம் விடப்படுகின்றன.

அங்குள்ள இடைத்தரகர்கள் ஏலம் எடுக்கின்றனர். பின், அவர்களிடம்இருந்து வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கிடைக்கும் வருவாயைவிட, இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "அரசின் கொள்முதல் மையமானநீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு( என்.சி.எம்.எஸ் ) பூண்டு, காய்கறிகள்ஆகியவற்றை கொண்டு செல்லவிடாமல் இடைத்தரகர்கள் தடுக்கின்றனர். இதனால்,மண்டிகள் வைத்துள்ள இடைத்தரகர்களிடம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் நிர்ணயிக்கும் விலையைத்தான் பெற முடிகிறது.

இவற்றை வாங்கிச் செல்ல வெளி மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் பலர் வருகின்றனர். ஆனால், அவர்களை தடுத்து விடுகின்றனர். இடைத்தரகர்களிடமிருந்து நீலகிரி மாவட்ட விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

நீலகிரி மாவட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "இங்கிருந்து ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் டன் அளவிலான பூண்டு, மேட்டுப்பாளையத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றை வட மாநில விவசாயிகள், வியாபாரிகள் விதைக்காக கொள்முதல் செய்கின்றனர். மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், பல ஆண்டுகளாக பூண்டு விற்பனை நிறுத்தப் பட்டிருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,மீண்டும் பூண்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி கூட்டுறவு மார்க்கெட்டிங் சங்கத்தில் கமிஷன் தொகையாக ரூ.3 மட்டுமே பெறப்படுகிறது. உடனுக்குடன் பணப் பட்டு வாடா செய்யப் படுகிறது. இத்தகைய சகல வசதிகளையும் கொண்டுள்ளதால், நீலகிரி மாவட்ட பூண்டு விவசாயிகள் என்.சி.எம்.எஸ் நிறுவனத்துக்கு பூண்டு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். அதேசமயம், மேட்டுப் பாளையத்திலுள்ள 5 தனியார் மண்டிகளில் மட்டுமே பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு 10 சதவீதம் கமிஷன் தொகை பெறப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி பூண்டை வாங்க வரும் விவசாயிகளை என்சிஎம்எஸ் நிறுவனத்துக்கு செல்லவிடாமல், தற்போது தனியார் மண்டி உரிமையாளர்கள் தடுத்து வருகின்றனர். இதனால், என்.சி.எம்.எஸ்-க்கு கொண்டு செல்லப்படும் பூண்டுகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை பாதிப்பதுடன், நஷ்டம் ஏற்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

எனவே, வடமாநில வியாபாரிகள் என்சிஎம்எஸ் மண்டிகளுக்கு வந்து பூண்டை வாங்கிச் செல்லவும், தனியார் மண்டி உரிமையாளர்கள் அவர்களை தடுக்காத வண்ணமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக ஏலம் நடத்தவும் நடவடிக்கை எடுத்து, நீலகிரி மாவட்ட விவசாயிகளை காக்க வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாக நீலகிரி உருளைக் கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்