இந்தியாவின் ஏற்றுமதி தடையால் 12 ஆண்டில் இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் அரிசி விலை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால் சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

உலகின் உணவு தானிய தேவையில் உக்ரைனும் ரஷ்யாவும் சுமார் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன. கடந்த 16 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடிப்பதால் சர்வதேச அளவில் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் பொருளாதார தடையால் ரஷ்யாவின் உணவு தானியங்களை பெரும்பாலான நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

இதனிடையே, ஐ.நா. சபையின் சமரசத்தால் உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய இடையூறு செய்யமாட்டோம் என்று ரஷ்யா உறுதி அளித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அண்மையில் வெளியேறியது. அதோடு உக்ரைனின் முக்கிய துறைமுகங்கள், உணவு தானிய கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் உணவு தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கோதுமை, அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவின் ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஐநா உணவு, வேளாண்மை துறை வட்டாரங்கள் கூறியதாவது:

உலகின் அரிசி தேவையில் சுமார் 40.4 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்து வந்தது. இங்கிருந்து சுமார் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்திய அரசின் அரிசி ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அரிசியை ஏற்றுமதி செய்தாலும் அந்த நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். இந்திய அரசின் அரிசி ஏற்றுமதி தடையால் சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE