உயிர் உரங்கள் தயாரிக்கும் மகளிர் மேலவளவு குழுவினர்!

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: நஞ்சில்லா விவசாய கிராமங்களை உருவாக்குவதே இலக்கு என்ற உன்னத நோக்குடன் உழவர்களுக்கு உயிர் உரங்கள், பூஞ்சாணக்கொல்லிகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் மேலவளவு மகளிர் குழுவினர்.

ரசாயன உரங்களின் அதீத பயன்பாட்டால் மண்ணும், விளை பொருட்களும் மாசடைந்துள்ளன. இதனால் தற்போது இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நஞ்சில்லா விவசாய கிராமங்களை உருவாக்குவதே இலக்கு என்ற உன்னத நோக்கோடு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் மூலம் இயற்கை உரங்களை தயாரித்து இந்த மண்ணையும், மக்களையும் காத்து வருகின்றனர் மதுரை மாவட்டம் மேலவளவு மகளிர் குழுவினர்.

இதுகுறித்து மகளிர் குழுத் தலைவி பவானி, செயலாளர் நதியா, பொருளாளர் ரேவதி ஆகியோர் கூறியதாவது: தமிழக அரசின் வேளாண் துறையின் கொட்டாம்பட்டி உதவி இயக்குநர் மதுரைசாமி மூலம் நீர்வள, நிலவள திட்டத்தில் ரூ. 1 லட்சம் நிதியுதவியில் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தை 2019-ல் தொடங்கினோம்.

எங்கள் குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அரசு வேளாண்மைக் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனம், குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றோம்.

மகளிர் குழுவினர் தயாரித்த உயிர் உரங்கள்.

பயிர்களில் மண், நீர், விதையின் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணக்கொல்லி டிரைக்கோடெர்மா விரிடியை முதலில் தயாரித்து விற்பனை செய்தோம். அதைத்தொடர்ந்து பேசில்லஸ் சாப்டில்லஸ், உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ரைசோபியம், துத்தநாக பாக்டீரியா, உயிர் நூற்புழுக் கொல்லி, வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்) ஆகிய உயிர் உரங்களை திரவ வடிவில் தயாரித்து உயிர்வேலி என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறோம்.

இதனை பயன்படுத்திய விவசாயிகள் நல்ல பலனடைந்துள்ளனர். நேரடி விற்பனை மட்டுமின்றி அஞ்சல் பார்சல் சேவை மூலமும் உயிர் உரங்களை அனுப்பி வருகிறோம். மேலும் இயற்கை உர மல்லிகை மாதிரி செயல் விளக்கத் திடல் அமைத்துள்ளோம். இதனை விவசாயிகள் பார்வையிட்டு, எங்கள் உயிர் உரங்களை நம்பிக்கையுடன் பெற்றுச் செல்கின்றனர். உயிர் உரங்களை உற்பத்தி செய்ய விரும்பும் மற்ற மகளிர் குழுவினருக்கும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE