ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் வாபஸ்: ரிசர்வ் வங்கி தகவல்

By செய்திப்பிரிவு

மும்பை: ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மாற்றிக்கொள்ளலாம் என காலஅவகாசமும் வழங்கப்பட் டுள்ளது.

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. அதாவது பழைய ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட்டாகவோ அல்லது அதற்கு ஈடான மாற்று கரன்சியாகவே தரப்பட்டுள்ளது .

ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பின் போது இந்த வகை நோட்டுகள் புழக்கத்தில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புக்கு இருந்தன. ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் திரும்பப் பெற்றுவிட்டன. இதையடுத்து, எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.42,000 கோடி அளவுக்கே உள்ளது.

பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை எளிதான முறையில் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாபஸ் பெறப்பட்டதில் 87 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், எஞ்சிய 13 சதவீத நோட்டுகள் பிற கரன்சிகளாகவும் மாற்றித் தரப்பட்டுள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE