மூடி’ஸ் தர மதிப்பீடு மோடியின் சாதனை!

By எஸ்.ரவீந்திரன்

 

மெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு தர மதிப்பீட்டு நிறுவனம் மூடி’ஸ், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தர மதிப்பீட்டை பிஏஏ3-ல் இருந்து பிஏஏ-2 ஆக உயர்த்தியுள்ளது. இது பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறலாம். மூடி’ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியானவுடன், 500 புள்ளிகள் வரை தொடர்ந்து சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, ஒரே நாளில் 400 புள்ளிகள் உயர்ந்தது. இது ஆரம்பம்தான். இன்னும் பல உயர்வுகள் காத்திருக்கிறது. மூடி’ஸ் நிறுவனத்தின் இந்த தர மதிப்பீடு உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. காரணம், வலுவான பொருளாதார அடிப்படை மற்றும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள். 2018-ல் சீனாவையும் தாண்டி, இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி இருக்கும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது. ஜிஎஸ்டி அமல், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இதன் காரணமாக, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 2022-ல் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உயரும் என்கிறது ஐஎம்எப்.

குறைந்த பணவீக்க விகிதம், குறைவான வட்டி விகிதம் போன்ற காரணங்களால் பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட சரிவைத் தாண்டி இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது என ஏர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியர்களின் சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி டாலர். மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் லட்சாதிபதிகள் இருக்கிறார்கள். இது 2022-ல் 3.72 லட்சமாக உயரும். சொத்து மதிப்பு 7.7 லட்சம் கோடி டாலராக அதிரிக்கும் என்கிறது கிரெடிட் சூஸ் நிறுவனத்தின் அறிக்கை.

தனிநபர் சராசரி வருமானம் கடந்த ஆண்டில் 1440 டாலராக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 1591 டாலராக அதிகரித்துள்ளது. 10.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2016-ல் 26,230 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி, 2017-ல் 27,470 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 4.7 சதவீதம் வளர்ச்சி. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான வளர்ச்சி இது. அதே நேரம் இறக்குமதி 0.17 சதவீதம் குறைந்துள்ளது. இது ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு அறிகுறியாகும்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு 15 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு 60,100 கோடி டாலராக உள்ளது. முக்கியமான துறைகளில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தியதால், பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதெல்லாம்தான் தரக் குறியீடு உயர்வுக்கான முக்கிய காரணங்கள். இந்த மாற்றத்துக்கு காரணம், மோடி அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்கள்.

பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட பிறகும், இந்தியாவின் தரக் குறியீட்டை மூடி’ஸ் உயர்த்தவில்லை. அதனால், பிரிக்ஸ் நாடுகளுக்கென்று தனியாக ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடி, செப்டம்பரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் குரல் எழுப்பினார். அதற்கு மற்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியாவின் தரக் குறியீட்டை உயர்த்தியுள்ளது மூடி’ஸ்.

முதலில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் 30 இடங்கள் முன்னேறி, 100-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. எந்த நாடுமே இந்த அளவுக்கு ஒரே ஆண்டில் முன்னேற்றம் கண்டதில்லை என உலக வங்கி பாராட்டியது. அடுத்த வாரமே, மூடி’ஸ் நிறுவனம் இந்தியாவின் தரக் குறியீட்டை உயர்த்தியிருக்கிறது. அதோடு பிரதமர் மோடியின் புதிய சீர்திருத்தங்களையும் பாராட்டியுள்ளது.

பணமதிப்பு நீக்கத்தால், பல நிறுவனங்களின் விற்பனை குறைந்து தற்காலிகமான மந்த நிலை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், கறுப்பு பணத்தை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கை என்பதால், அதைப் பாராட்டியுள்ளது மூடி’ஸ். உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் சென்றடையும் வகையில் அமல் செய்யப்பட்ட ஆதார் அட்டை முறை, நாடு முழுமைக்குமான ஒரே வித ஜிஎஸ்டி வரி போன்றவை சிறப்பான விஷயங்கள் என்றும் மூடி’ஸ் பாராட்டியிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என மூடி’ஸ் கணித்துள்ளது. ஆனால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சாதகமாக சமீபத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக உயரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்த தர மதிப்பீட்டு உயர்வால், இந்தியாவுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் மிகவும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். இந்திய நிறுவனங்கள் புதிய முதலீடுகள் மூலம் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வார்கள். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதோடு, வெளிநாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்யும். இந்தியாவின் அதிக மக்கள் தொகை, மக்களின் வாங்கும் திறன், நிலையான அரசியல் சூழ்நிலை போன்ற சாதகமான அம்சங்கள் இருக்கும்போது, அந்நிய முதலீடு மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாவம் கிரிக்கெட் பயிற்சியாளர் டாம் மூடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி. மூடி’ஸ் அறிக்கை வெளியானவுடன், இவரது முகநூலில் ஏகப்பட்ட பதிவுகள். எல்லாமே கெட்ட வார்த்தையில் திட்டி. எப்படி பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக தர மதிப்பீடு செய்யலாம் எனக் கேட்டு, கேரள கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கொந்தளித்துப் போய் போஸ்ட் போட்டிருந்தனர். ``அந்த மூடிஸுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. எனக்கு நிதி விவகாரம் எல்லாம் தெரியவே தெரியாது..'' எனக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக பதில் போட்டிருந்தார் டாம் மூடி. அப்புறம்தான் உண்மை தெரிந்து முகநூலில் திட்டுவது குறைந்திருக்கிறது.

117 ஆண்டு நிறுவனம் மூடிஸ்

ஜான் மூடி, கடந்த 1900-ல் மூடி அண்ட் கம்பெனியை தொடங்கினார். முதலில் முதலீடு தொடர்பான தகவல்களை மட்டும் வெளியிட்டு வந்தது இந்நிறுவனம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் 1907-ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, தனது நிறுவனத்தையே விற்று விட்டார் மூடி. மீண்டும் 1909-ல் மூடிஸ் என்ற பெயரில் பங்குகளை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்து அமெரிக்க நகரங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களை மதிப்பீடு செய்து பரிந்துரை வெளியிட்டார். 1970-ல் எந்த வங்கிகளின் டெபாசிட்டுகளில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வு செய்து பரிந்துரை செய்தார். அதன்பிறகு, படிப்படியாக பல்வேறு நாடுகளின் நிதி நிலைமை, பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு அறிக்கைகள் வெளியிடும் அளவுக்கு மூடிஸ் நிறுவனம் வளர்ந்தது. தற்போது முதலீடு செய்தால் போட்ட காசே வராத மோசமான நாடு என்பதில் தொடங்கி முதலீட்டுக்கு சூப்பரான நாடு என்பதை வரை 21 வகையான தரக் குறியீடுகளை வழங்கி வருகிறது மூடிஸ்.

ravindran.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்