கிருஷ்ணகிரியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: விலை உயர்வு கைகொடுக்கும் என நம்பிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தொடர் விலை உயர்வால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் ஊடுபயிராகச் சின்ன வெங்காயத்தை தங்கள் வீட்டுத் தேவைக்குச் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, தக்காளி, சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப் பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்துக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மாவட்டத்தில் சின்ன வெங்காயம் நேரடியாகவும், சிலர் ஊடுபயிராகவும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் சந்தை களில் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. தற்போது உழவர் சந்தையில் ரூ.100-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். அறுவடை வரை தொடர்ந்து விலை உயர்வு கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

விலை சரிந்தாலும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறும்போது, “சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அறுவடை நடைபெற்று வரும் கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் வேடசந்தூர் பகுதியிலிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE