மதுரையில் முதன்முறையாக பேரீச்சம் பழ சாகுபடி - அறுவடை செய்து சாதித்த விவசாயி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரையில் முதல்முறையாக பேரீச்சம் பழம் சாகுபடி செய்து விளைவித்துள்ளார் விவசாயி மு.மூவேந்திரன். மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் மு.மூவேந்திரன் (47). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அலங்கா நல்லூர் அருகே இடையபட்டியில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பேரீச்சம் பழம் பயிரிட்டுள்ளார். 4 ஆண்டுகளான நிலையில், தற்போது அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து மு.மூவேந்திரன் கூறியதாவது: ஓய்வுக் காலத்தில் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் அதிக பராமரிப்பில்லாத விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த எனது சகோதரர் நிர்மல் கொடுத்த ஆலோசனையின் பேரில் பேரீச்சம் பழ சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட பேரீட்சை மரக்கன்றை தலா ரூ.5 ஆயிரம் வீதம் 95 மரக்கன்றுகள் வாங்கி நட்டேன். 25-க்கு 25 அடி இடைவெளியில் நட்டுள்ளேன். 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஆடு, மாட்டுச்சாணம் என இயற்கை உரங்களை மட்டுமே இட்டு வளர்த்து வருகிறேன். தற்போது மூன்றரை ஆண்டு கள் முடிந்த நிலையில் பேரீட்சை நன்கு விளைந்து அறுவடைக்கு வந்துள்ளது.

ஆண் மரங்கள் 5, பெண் மரக்கன்றுகள் 90 நட்டுள்ளேன். ஆண்டுக்கு இருமுறை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்கு குறைந்தது 50 கிலோ வரையிலும் நன்றாகப் பராமரித்தால் 200 கிலோ வரையிலும் அறுவடை செய்யலாம். சுமார் 100 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். கிலோ ரூ.100 வீதம் விற்பனை செய்யலாம்.

இதில் அனுபவமுள்ள அவினாசியைச் சேர்ந்த தங்கவேலின் ஆலோசனையில் பராமரித்து வருகிறேன். கிளிகள் மற்றும் பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க வலைகளை போர்த்தி பாதுகாத்துள்ளேன். தோட்டக் கலைத்துறையினர் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொடுத்தது உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

ரா.நிர்மலா

இது குறித்து அலங்காநல்லூர் தோட்டக் கலை உதவி இயக்குநர் ரா.நிர்மலா கூறியதாவது: பேரீட்சை ஒரு வெப்ப மண்டல பயிர். இது ஈராக், ஈரான், சவுதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் அதிக அளவு சாகுபடியாகிறது. தமிழகத்தில் தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய் கின்றனர்.

பர்ஹு, அஜ்வா, எலைட், ஷம்ரன், மெட்ஜுல், ஜாகிடி, ஹலாவி, கத்ராவி, கலாஷ் ஆகிய ரகங்கள் உள்ளன. இதில் பர்ஹு ரகம் தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்குப் பின் நிலத்தின் ஈரப்பதத்தைப் பொருத்து 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.

செடி நட்ட 2 - 3-ம் ஆண்டுகளில் இருந்து பழங்கள் கிடைக்கத் தொடங்கும். படிப்படியாக ஒரு மரத்துக்கு 100 முதல் 150 கிலோ வரை பழம் கிடைக்கும். சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE