பட்ஜெட் தயாரிப்பும், செயல்படுத்தலும்

By இராம.சீனுவாசன்

பட்ஜெட் (Budget) என்ற வார்த்தையே நமது இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை. ஆண்டு நிதி நிலை அறிக்கை (Annual Financial Statement) என்றே உள்ளது. ஆனாலும், பொதுவான விவாதங்களிலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் பட்ஜெட் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது, நாமும் அவ்வாறே சொல்வோம்.

பட்ஜெட் என்பது, அரசின் ஒரு நிதி ஆண்டுக்கான (ஏப்ரல் 1 துவங்கி மார்ச் 31 வரை) வரவு செலவுகள் பற்றிய மதிப்பீடுகளாகும். ஒரு பட்ஜெட் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளின் மதிப்பீடுகளைக் (Budget Estimates) கொண்டதாக இருக்கும். இந்த மதிப்பீடுகளில் உள்ள வரவுகளைப் பெறவும் செலவுகளைச் செய்யவும் அதிகாரங்களை அரசு பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்படுகிறது.

இதில் வரி வருவாய்கள் ‘நிதி சட்ட வரைவு’ (Finance Bill) என்றும், செலவுகள் ‘தொக்கீடு சட்ட வரைவு’ (Appropriation Bill) என்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்ட வரைவுகள் சட்டங்களாக நிறைவேற்றியபின், அரசுக்கு வரி வாங்கும் அதிகாரமும், செலவு செய்யும் அதிகாரமும் கிடைக்கும்.

ஒரு நிதி ஆண்டில் அரசு சேகரித்த வரி வருவாய், செய்த செலவுகள் யாவும் தன்னாட்சி பெற்ற தணிக்கை அதிகாரியால் (Comptroller and Auditor General of India –CAG) தணிக்கை செய்யப்படும். அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீடுகளை கொடுக்கும்போது, நடப்பு நிதி ஆண்டின் திருத்திய மதிப்பீடுகளையும் (Revised Estimates) சென்ற நிதி ஆண்டின் உண்மை (அ) கணக்கில் உள்ள சரியான வரவு செலவுகளையும் (Actuals/Accounts) கொடுக்கவேண்டும்.

இந்த மூன்று வருடங்களின் ஒப்பீடுகள் மூலம் கடந்த காலத்தில் அரசு நிதி எவ்வாறு இருந்துள்ளது, வரும் ஆண்டில் ஏற்பட உள்ள மாற்றங்கள் பற்றிய புரிதலுக்கு மிக அவசியம். இதில் வரும் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுக்குதான் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படுகிறது.

உதாரணமாக, இப்போது சமர்ப்பிக்கப்பட உள்ள பட்ஜெட் 2014-15யில், 2014-15 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடும், 2013-14 நிதி ஆண்டுக்கான திருத்திய மதிப்பீடும், 2012-13 நிதி ஆண்டுக்கான உண்மை வரவு-செலவுகளும் இருக்கும். இந்த மூன்று மதிப்பீடுகளையும் அரசின் பொருளாதார கொள்கைகளையும் விளக்கி நிதி அமைச்சர் நிகழ்த்தும் ‘பட்ஜெட் உரையுடன்’, பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் துவங்குகிறது.

பட்ஜெட் உரையின் முதல் பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பற்றியும், அதன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளான அரசு திட்டங்கள் பற்றியும் இருக்கும், இரண்டாம் பகுதியில் வரி விதிப்பு அறிவிப்புகள் இருக்கும். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அடுத்த நிதி ஆண்டின் துவக்கமான ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன், பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

அதாவது, அடுத்த வருடத்தின் நிதி மற்றும் ஒதுக்கீடு சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். எனவே, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளன்று பட்ஜெட் உரையுடன் பட்ஜெட் தாக்கல் துவங்கும். மார்ச் மாதம் முழுவதும் பட்ஜெட் விவாதிக்கப்பட்டு நிதி, ஒதுக்கீடு சட்டங்கள் நிறைவேற்றப்படும்.

ஒதுக்கீடு சட்டம் நிறைவேறுவதற்கு முன் ஒவ்வொரு அமைச்சகமும் ‘தொகைத் தேவை’ (demand for grants) என்பதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். இதில் ஒவ்வொரு அமைச்சகத்தின் எல்லா செலவு திட்டங்களும் விரிவாகக் கொடுக்கப்படும்.

எல்லா அமைச்சகங்களின் ‘தொகைத் தேவைகளும்’ நிறைவேற்றப்பட்டபின் ‘ஒதுக்கீடு சட்டம்’ நிறைவேற்றப்படும்.இந்த ஆண்டு, பொது தேர்தல் குறுக்கிட்டதால், நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் (Budget 2014-15) வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்