செமிகண்டக்டர் மாநாடு | இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் - வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

By செய்திப்பிரிவு

காந்திநகர்: இந்திய செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய முன்வருமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

‘செமிகான் இந்தியா மாநாடு 2023’ என்ற பெயரில் செமிகண்டக்டர் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், சந்திரசேகர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மைக்ரோன் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், SEMI, AMD போன்ற செமிகண்டக்டர் துறையின் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை அமைக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம். இதற்காக, தொழில்துறை, கல்வித் துறை, ஆராய்ச்சித் துறை நிறுவனங்களின் உலகலாவிய தலைவர்களை ஒன்றிணைப்பதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. செமிகண்டக்டர் துறையில் வடிவமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் உலகின் மையாக இந்தியாவை இது மாற்றும்.

நீங்கள் இந்தியர்களுக்காக சிப் தயாரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். யார் முன்வருகிறார்களோ அவர்களுக்கு அதற்கான நன்மை இருக்கும் என்று நான் நம்புகிறேன். உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் இந்தியா நம்பகமான நாடாக வளர்ந்து வருகிறது. இது வெறும் இந்தியாவின் தேவைக்காக மட்டுமல்ல. உலகிற்கு இப்போது நம்பகமான சிப் விநியோகச் சங்கிலி தேவைப்படுகிறது. அத்தகைய நம்பகமான நாடாக மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இல்லையென்றால் வேறு யார் இருக்க முடியும்.

இந்தியா மீதான உலக நம்பிக்கை அதிகரித்து வருகிறது. நிலையான, பொறுப்புள்ள, சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய அரசுதான் இதற்குக் காரணம். இந்தியர்கள் தொழில்நுட்பங்களோடு நெருக்கமானவர்கள். தொழில்நுட்பங்களை வேகமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். மலிவான கட்டணத்தில் வழங்கப்படும் டேட்டா, தரமான டிஜிட்டல் கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம் ஆகியவை இந்தியாவில் டேட்டா பயன்பாடு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் விருப்பங்கள் அதன் வளர்ச்சிக்கு உந்துதலாகத் திகழ்கின்றன" என்று பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE