தமிழக அரசு வழங்கி வந்த சலுகை ரத்தால் காற்றாலை தொழிலில் புதிய முதலீடுகள் பாதிப்பு

By இல.ராஜகோபால்

கோவை: தமிழக அரசு வழங்கி வந்த சலுகை ரத்து காரணமாக, காற்றாலை தொழிலில் புதிய முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம் முதல் முறையாக இந்த ஆண்டு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த துறையில் முதலீட்டை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் மே இறுதியில் தொடங்கி அக்டோபர் அல்லது நவம்பர் வரை ஆறு மாதங்கள் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியின் மொத்த கட்டமைப்பு 9,000 மெகா வாட்டாக உள்ளது.

தமிழக அரசு ஏற்கெனவே வழங்கி வந்த சலுகைகளை ரத்து செய்தது, பழைய காற்றாலைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்துவது உள்ளிட்ட காரணங்களால் புதிய முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இத்தொழிலில் உள்ளவர்களும் விரிவாக்கம் செய்ய யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் அரசு அதிக சலுகைகள் வழங்கும் காரணத்தால் அம்மாநிலத்தின் மொத்த மின்உற்பத்தி கட்டமைப்பு 9,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம் ராஜா கூறும் போது, ‘‘தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு 4,500 மெகா வாட்டாக உள்ளது. 1980-ம் ஆண்டு முதல் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

தமிழகத்தில் சமீபத்தில் மின்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அரசு தொழில்துறையினருக்கு வழங்க வேண்டிய தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது போன்று நடவடிக்கைகள் தொடர்ந்தால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் எதிர்வரும் காலத்தில் சிறந்து விளங்கும்,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE