ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் இருந்து பிரிக்கக் கோரி பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து வீடியோ கேமிங்கை பிரிக்க வேண்டும் என்று கோரி, பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம் எழுதி உள்ளன.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் 45 வீடியோ கேமிங் நிறுவனங்கள் எழுதி உள்ளன. இந்தக் கடிதம் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "ஆன்லைன் கேம்ஸ் என்பது மிகவும் விரிவான அர்த்தம் நிறைந்த ஒரு வார்த்தை. பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களும், வீடியோ கேம்ஸ்களும் ஆன்லைனில் விளையாடப்படுகின்றன. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. ஆனால், இதில் மிகப் பெரிய குழப்பம் பரவலாக இருக்கிறது. இரண்டும் ஆன்லைன் கேமிங் என்றே அழைக்கப்படுகின்றன.

பணத்தை வைத்து ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுக்களை வழங்கும் நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ், போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை வழங்குகின்றன. இத்தகைய விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு மிகவும் அதிகம் என அந்த நிறுவனங்கள் குறைகூறி வருகின்றன.

வீடியோ கேம்களை ஆன்லைன் கேம்கள் என்ற பொது அர்த்தத்தில் குறிப்பிடுவதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சர்வதேச புரிதலுடன் ஒப்பிடும்போது, இந்திய நீதித்துறை இந்த விஷயத்தில் மாறுபட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் ஆன்லைனில் வீடியோ கேம்ஸ்களை விளையாடுபவர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள், விளையாட்டுக்களை வெளியிடுபவர்கள், ஊடகங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜிஎஸ்டி சார்ந்தும் இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு மட்டும்தான் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. வீடியோ கேம்களுக்கு அல்ல. வீடியோ கேம்களுக்கு 18% ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்படுகிறது. பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான எதிர்மறை பார்வை, வீடியோ கேம்கள் மீதும் ஏற்படுகிறது. இரண்டையும் இணைப்பது நியாயமற்றது. இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது.

இரு வகையான விளையாட்டுக்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய குழப்பம் பொதுமக்களுக்கு இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு இரண்டையும் வேறுபடுத்தி காட்டாமல் இரண்டுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுத்திருப்பதாக சர்வதேச விளையாட்டு நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இது இந்திய வீடியோ கேம் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE