மானிய குறைப்பால் விலை உயர்வு - சரிவை சந்திக்கும் மின்சார வாகன விற்பனை

By க.சக்திவேல்

கோவை: பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரி போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர், மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்தது. அதற்கேற்ப மின்சார வாகன தொழில் நுட்பமும் முன் பிருந்ததை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) பதிவு செய்ய வேண்டும்.

இந்த திறனுக்கு கீழ் உள்ள மின்சார வாகனங்களை பதிவு செய்ய தேவையில்லை. அதன்படி, 2021-ம் ஆண்டில் கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ), 5 பகுதி அலுவலகங்களில் மொத்தம் 1,845 மின்சார இருசக்கர வாகனங்களும், 245 மின்சார கார்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 2022-ம் ஆண்டில் 6,044 இருசக்கர வாகனங்களும், 517 கார்களும், 2023-ம் ஆண்டில் 6,532 இருசக்கர வாகனங்களும், 542 கார்களும் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படும் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மும்மடங்குக்கு அதிகமாகவும், கார் எண்ணிக்கை இரு மடங்கும் இரண்டு ஆண்டுகளில் அதிகரித்தது.

இதற்கு, எரிபொருள் விலையேற்றம் தவிர, மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகளும் காரணமாக இருந்தன.15 சதவீதமாக குறைப்பு: இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ‘எஃப்ஏஎம்இ-2’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு கிலோ வாட் (பேட்டரி திறன்) ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, மின்சார வாகனத்தின் விலையில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை ஊக்கத் தொகையாக வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஊக்கத்தொகையானது கடந்த மாதம் முதல் 15 சதவீதமாக குறைக்கப் பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாக கூறுகின்றனர் விற்பனை யாளர்கள்.

இது தொடர்பாக மின்சார இருசக்கர வாகன விற்பனை யாளர்கள் கூறும்போது, “முன்பு மாதந்தோறும் சுமார் 30 முதல் 35 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தோம். மானிய குறைப்புக்கு பிறகு ஒரு வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தற்போது 5 வாகனங்களை கூட மாதத்துக்கு விற்பனை செய்ய முடியவில்லை. இதே நிலை நீடித்தால் விற்பனை மையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்”என்று வேதனை தெரிவித்தனர்.

வாகன பதிவின்போது சலுகை: மின்சார வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டண சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “தற்போது மொத்த வாகன பதிவில் சராசரியாக 5 முதல் 10 சதவீதம் வரை மின்சார வாகனங்கள் பதிவாகின்றன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, வாகனத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் கீழ் இருந்தால், அதன் மதிப்பில் 10 சதவீதமும், வாகனத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்தால், வாகன மதிப்பில் 15 சதவீதமும் சாலை வரியாக செலுத்த வேண்டும்.

இருசக்கர வாகனமாக இருந்தால் அதன் மதிப்பில் 8 சதவீதத்தை சாலை வரியாக செலுத்த வேண்டும். இதுதவிர, சாலை பாதுகாப்பு கட்டணம், வாகன பதிவு கட்டணம், சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஆனால், மின்சார வாகனங்களுக்கு இவை அனைத்திலும் இருந்து மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளித்துள்ளன.

‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் அளிக்கப்படும் பதிவு அட்டையை பெற மட்டும் உரிமையாளர் ரூ.250 செலுத்தினால் போதும். உதாரணமாக, ஒருவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கினால் அவருக்கு வரி, இதர கட்டணங்கள் என ரூ.9,000 வரை மிச்சமாகும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்