கிராமப் பகுதிகளில் வருகிறது ஒயிட் லேபில் ஏடிஎம்கள்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா முழுவதும் சிறு கிராமப் பகுதிகளில் ஒயிட் லேபில் ஏடிஎம்கள் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிசான் ராவ் கரத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க மூன்றாம் நிலை முதல் 6-ம் நிலை வரையிலான பகுதிகளில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை (டபிள்யூ.எல்.ஏ) அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தும் நோக்கில் நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட் கார்டுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்குஒயிட் லேபில் ஏடிஎம்கள் வங்கி சேவைகளை வழங்குகின்றன. பணத்தை விநியோகிப்பதைத் தவிர, ஒயிட் லேபில் ஏடிஎம்கள் பிற சேவைகள் மற்றும் வசதிகளை வழங்கும். கணக்குத் தகவல், ரொக்கப் பணம் செலுத்துதல், வழக்கமான, மினி ஸ்டேட்மென்ட், பின் எண் மாற்றம், காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்றவற்றை இந்த ஒயிட் லேபில் ஏடிஎம்கள் வழங்கும்.

ஒயிட் லேபில் ஏடிஎம்களின் எண்ணிகையை அதிகரிப்பதற்கும், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் நான்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை இயக்குகின்றன" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE