எஸ்யுவி கார்களை ஏற்றிச் செல்வதற்காக  2 அடுக்குகள் கொண்ட ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

லக்னோ: எஸ்யுவி கார்களை ஏற்றிச் செல்வ தற்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை 2 வாரத்தில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கார் தொழிற்சாலைகளில் இருந்து பிற இடங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு கார்களை குறைந்த செலவில் ஏற்றிச் செல்ல ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மூடப்பட்ட 2 அடுக்குகளைக் கொண்ட சரக்கு பெட்டிகள் (பிசிஏசிபிஎம்) இப்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் சிறிய கார்களை 2 அடுக்குகளிலும் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் எஸ்யுவி கார்களாக இருந்தால் ஒரு அடுக்கில் மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். அதாவது 27 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் 318 சிறிய கார்களை ஏற்றிச் செல்ல முடியும். அதேநேரம் 135 எஸ்யுவி கார்களை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.

இந்நிலையில், எஸ்யுவி கார்களை ஏற்றிச் செல்வதற்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை 2 வாரத்தில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஒரு ரயிலில் அதிகப்படியான எஸ்யுவி கார்களை ஏற்றிச் செல்ல முடியும்.

இதுகுறித்து, கடந்த 20-ம் தேதி வடக்கு ரயில்வே (லக்னோ பிரிவு) மண்டல புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிஷ் தப்ளியால் கூறும்போது, “எஸ்யுவி கார்களை இரண்டு அடுக்குகளில் ஏற்றிச் செல்வதற்கான புதிய பெட்டிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இது ‘ஆட்டோ கார் டாலர் வேகன்’ (எசிடி1) என அழைக்கப்படும். இதில் அதிக கார்களை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து செலவு கணிசமாக குறைவதுடன் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும்” என்றார்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரயில்வே துறையில் ஆராய்ச்சி பிரிவின் (சரக்கு பெட்டி) செயல் இயக்குநராக மணிஷ் பணிபுரிந்து வந்தார். சரக்கு பெட்டிகள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE