ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் திறமையான தொழிலாளரை வழங்கும் நாடு இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் மாநாடுகள் நடத்தி வருகிறது. அதன்படி, ஜி-20 அமைப்பின் தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

தற்போது 4-வது தொழிற்புரட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. புதிய தொழில் நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறும் இந்தூரில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றன.

புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பணியாற்ற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். திறன், மறு திறன், உயர் திறன் என்ற வகையில் பணியாளர்களின் தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்ப உலகில் நிலைத்திருக்க முடியும்.

இதை கருத்தில் கொண்டு இந்தியாவில், 'ஸ்கில் இந்தியா மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 'பிரதமர் கவுசால் விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் இதுவரை 1.25 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில் துறைகளில் இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கவனம் செலுத்தப்படுகிறது.

இந்திய தொழிலாளர்களின் நலன் கருதி 'இ-ஷ்ரம்' இணையதளத்தை தொடங்கி உள்ளோம். இந்த இணையத்தில் இதுவரை 29 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பு தகவல்கள், தொழில் பழகுநர் பயிற்சிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை தொழிலாளர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்திய சுகாதார ஊழியர்கள் திறமை, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினர். கரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில் இந்தியாவின் திறனை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பாராட்டியது. சுகாதாரத் துறை மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் இந்தியர்களின் திறன் மெச்சப்படுகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் திறமையான தொழிலாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE