அதானி குழுமத்தின் புகழை கெடுக்கவே ஹிண்டன்பர்க் அறிக்கை: கவுதம் அதானி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மும்பை: அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குற்றம்சாட்டியுள்ளார்.

அதானி எண்டர்பிரைசஸின் 31-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று நடைபெற்றது. இதில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் (ஹிண்டன்பர்க் பெயரை குறிப்பிடவில்லை) இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. தவறான தகவல் மற்றும் புறக்கணிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் கலவையாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பொது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பிடப்பட்ட 2004 முதல் 2015 காலகட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் அனைத்துக்கும் அதிகாரிகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை தீங்கிழைக்கும் முயற்சியாக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்பதே உண்மை.

இவ்வாறு கவுதம் அதானி பேசினார்.

பங்குகள் கடும் வீழ்ச்சி: கடந்த ஜனவரியில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அதானி நிறுவனப் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்ததுடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கவுதம் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை நிறுவன வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE