நல்ல வேலை கிடைக்க...

By எஸ்.எல்.வி மூர்த்தி

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்திய கம்பெனிகளில் பல தலைகீழ் மாற்றங்கள். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுகளில் பதிவுசெய்து, இன்டர்வியூ எப்போது வரும் என்று காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. கம்பெனிகள் திறமைசாலிகளைத் தேடி, கல்லூரிகளுக்குப் போகிறார்கள். இருபது வயதுக்காரர்களுக்கு கை நிறையச் சம்பளம், வசதிகள், வெளிநாட்டுப் பயணங்கள் என்று அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஊழியர்களை அடிமைகளாக நடத்திய காலம் போய்விட்டது. தங்கள் வேலை நேரங்களை அவர்களே நிர்ணயிக்கிறார்கள்.

ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால், வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்போடு அவர்களுக்கு உழைக்கும் மனப்போக்கு இன்று காணாமல் போய்விட்டது. கம்பெனிகள் அடிக்கடி ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஊழியர்களும் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். நான் பார்த்தவரையில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வேலை மாற்றுகிறவர், ஒரே வேலையில் நிலைத்திருப்பவரைவிட, அதிகச் சம்பளம் வாங்குகிறார், உயர் பதவிகள் பெறுகிறார்.

நல்ல வேலை கிடைக்கவேண்டுமா? வேலையில் முன்னேறி சம்பள உயர்வும், பதவி உயர்வுகளும் பெறவேண்டுமா? அல்லது வேலையை மாற்றவேண்டுமா? இவற்றில் நீங்கள் எதைச் செய்ய நினைத்தாலும், உங்களுக்கு டீல்களை முடிக்கத் தெரியவேண்டும். எப்படி என்று வழிகாட்டுகிறார்கள் பல அறிஞர்கள், அனுபவசாலிகள்.

எவ்வளவு சம்பளம் வேண்டும்?

பல கம்பெனிகளின் இன்டர்வியூக்களில் நான் அடிக்கடி பார்க்கும் நிகழ்ச்சி இது.

இன்டர்வியூவுக்கு வந்தவரிடம் கம்பெனி அதிகாரி கேட்பார், ”நீங்கள் நல்ல வேலையில் இருக்கிறீர்கள். ஏன் வேலையை மாற்ற விரும்புகிறீர்கள்?”

பதில் வரும், “எனக்குச் சம்பளம் குறைவாக இருக்கிறது. அதிகச் சம்பளம் வேண்டும்..”

“அதிகச் சம்பளம் என்றால் எவ்வளவு? தெளிவாகச் சொல்லுங்கள்.”

வேலை தேடி வந்தவர் தட்டித் தடுமாறுவார். ஏதோ ஒரு நம்பரைச் சொல்லுவார்.

அடுத்த கேள்வி நாங்கள் கேட்போம், “உங்களுக்கு நாங்கள் அத்தனை சம்பளம் ஏன் தரவேண்டும்?”

பதிலே வராது. வந்தாலும், ஏனோ தானோ பதில்கள்.

கடைக்கு சோப் வாங்கப்போகிறீர்கள். விலை கேட்கிறீர்கள். குறிப்பிட்ட விலை சொல்லாமல் கடைக்காரர் மழுப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ”வியாபாரமா பண்ணுகிறான்?” என்று கமென்ட் அடிப்பீர்கள். பக்கத்துக் கடைக்குப்போவீர்கள். சோப் விற்கவே இத்தனை பீடிகைகள். உங்கள் திறமையை, அனுபவத்தை, உழைப்பை, ஒரு நிறுவனத்துக்குத் தரும்போது, அவற்றுக்கு ஈடாக எத்தனை ஊதியம் வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எந்தக் கம்பெனி உங்களுக்கு வேலை தருவார்கள் நண்பரே?

இன்டர்வியூவுக்குப் போகும் முன்பே, எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருங்கள். இந்தத் தொகையை எப்படித் தீர்மானிப்பது? பக்கத்துக் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டா கண்டுபிடிக்க முடியும்? தேவை, கொஞ்சம் ஆராய்ச்சி.

அந்த கம்பெனியில் அல்லது அதே போன்ற கம்பெனிகளில், நீங்கள் தேடுவதுபோன்ற வேலைகளுக்கு என்ன ஊதியம் கொடுக்கிறார்கள் என்று விசாரியுங்கள். பத்திரிகைகளில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களிலும் இந்த விவரம் கிடைக்கலாம். www.glassdoor.co.in என்னும் இணையதளத்துக்கு விசிட் அடியுங்கள். பல கம்பெனிகள், பல்வேறு பணிகளுக்குத் தரும் சம்பள விவரங்கள் கிடைக்கும்.

உங்கள் படிப்பு, அனுபவம், தனித்துவமான ஏதேனும் திறமைகள், மேற்சொன்ன விவரங்கள், கம்பெனிக்கு உங்கள் பங்களிப்புகள் என்னவாக இருக்கும் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் கேட்கும் சம்பளத்தைச் சுருக்கமாகச் சொல்லி, நியாயப்படுத்துங்கள். இன்டர்வியூ செய்பவர் அசந்துவிடுவார். உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகும்.

ஒரு சின்ன க்ளூ. நீங்கள் மாதம் 25,000 ரூபாய் எதிர்பார்க்கிறீர்களா? 30,000 – த்திலிருந்து 40,000 வரை எதிர்பார்க்கிறேன் என்று சொல்லுங்கள். அவர் பேரம் பேசுவார். ஒருவேளை 30,000 தரலாம். வேலை தேடுபவர் எந்தத் தொகையைக் கேட்டாலும், அதற்கு அதிகமாக எந்தக் கம்பெனியும் கொடுத்து நான் இதுவரை பார்த்ததில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் பற்றிச் சொன்னவுடன், உங்களைப் பேட்டி காண்பவர் கீழ்க்கண்ட பதில் தரலாம்:

”நாங்கள் இன்னும் நிறையப் பேரை இன்டர்வியூ செய்யவேண்டியிருக்கிறது. சம்பளம் பற்றிப் பிறகு பேசலாம்.”

உங்கள் அதிருப்தியையோ, ஏமாற்றத்தையோ காட்டாதீர்கள்.

“தாங்க் யூ. உங்கள் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுங்கள்.

என்ன வேலை?

சாதாரணமாக, இன்டர்வியூக்களில், அவர்கள் கேள்விகள் கேட்டு முடித்தபின், “உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டுமா? உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா? என்று கேட்பார்கள்.

உங்கள் தனித்தன்மையை வெளிச்சம்போட்டுக்காட்டக் கிடைக்கும் அற்புத வாய்ப்பு இது. ஆனால், 100 –க்கு, 99 பேர், இந்த வாய்ப்பைக் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

இன்டர்வியூவுக்கு வருமுன், கம்பெனியின் இணையதளம், உங்கள் நண்பர்கள் ஆகிய தொடர்புகள் மூலமாக கம்பெனி பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப்பற்றி, என்ன கேள்விகள் கேட்கலாம் என்று பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். இவை புத்திசாலித்தனமான கேள்விகளாக இருக்கவேண்டும், உங்களுக்கு அறிவுத் தேடல் இருக்கிறது என்பதை நிரூபிக்கவேண்டும். வேலையின் முக்கிய அம்சங்கள் என்ன, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி, இடமாற்றங்கள் வருமா ஆகிய அம்சங்களை நீங்கள் கேட்கும் வாய்ப்பு இது.

எல்லோருமே தங்கள் சாதனைகளைப் பற்றிப் பேச ஆசைப்படுவார்கள். பார்லே பிஸ்கட் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குப் போகிறீர்களா? அவர்களுடைய பார்லே ஜி பிஸ்கெட்தான் 5,000 கோடி ரூபாய் வருட விற்பனை, உலகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட், 1929 முதல் இன்றுவரை 85 வருடங்களாக நிலைத்து நிற்கும் பிராண்ட். “இவை அத்தனையையும் எப்படிச் சாதித்தீர்கள்?” என்று கேளுங்கள். நீங்கள் இண்டர்வியூவுக்காக ஹோம் ஒர்க் செய்திருக்கிறீர்கள் என்பதையும் இதன் மூலம் நீங்கள் தெரியப்படுத்துவீர்கள். பேட்டி காண்பவர்களை இம்ப்ரெஸ் செய்ய நல்ல வழி இது. இதுதானே உங்கள் லட்சியம்?

டீலை முடிப்பது

இன்டர்வியூக்கள் முடியும் நேரம். “மிக நன்றாகப் பதில்கள் கொடுத்து, எக்கச்சக்க நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துபவர்களும் சறுக்கும் நேரம் இது” என்று சொல்கிறார் மனிதவள ஆலோசகர் சந்தர். ”இன்டர்வியூ முடிகிறது” என்பதைப் பலர் புரிந்துகொள்வதேயில்லை” என்கிறார் அவர். இதுதான் வேலைதேடும் டீல் முடிகிற நேரம். உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைக் கம்பெனி நிர்வாகிகள் மனங்களில் ஆழமாகப் பதிக்கக் கிடைக்கும் வாய்ப்பு. பேட்டி காண்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

பதற்றம் காட்டுகிறார்களா, செல் போனையும், வாட்சையும் அடிக்கடி பார்க்கிறார்களா?

சம்பளம் பற்றிப் பேசி முடித்துவிட்டார்களா?

வேறு ஏதாவது கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டார்களா?

“தாங்க் யூ ஃபார் கமிங்” என்று நன்றி சொன்னார்களா?

”உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி, விடை பெறுங்கள்.

சில சமயங்களில், நீங்கள் மிகப் பொருத்தமானவர் என்று நினைத்தால், நிர்வாகிகள் உங்களுக்கு வேலையே தந்துவிடலாம். அப்படி நடந்தால், நம்மை விட்டால், இவர்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லை போலிருக்கிறது என்று தலைக்கனத்தோடு நடந்து கொள்ளாதீர்கள். வேலை பற்றிய முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். முடிவெடுக்க இரண்டு நாட்கள் தேவை என்று அனுமதி பெறுங்கள். வெளியில் கம்பெனி பற்றி விசாரியுங்கள்.

ரகுபதி, கெமிக்கல் எஞ்சினீயர். சென்னையில் வேலை. பரோடாவில் ஒரு உரத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அவர் எதிர்பார்த்ததைவிட அதிகச் சம்பளம் கொடுத்தார்கள். கம்பெனி குறித்துப் பலரிடம் விசாரித்தார். அப்போது கிடைத்தது அந்த அதிர்ச்சிச் செய்தி – அந்தத் தொழிற்சாலையில் பாதுகாப்பு வசதிகள் குறைவு, விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. ரகுபதி வேலையில் சேர இயலாமையைத் தெரிவித்தார்.

புதிய வேலை என்பது புதிய கம்பெனி மட்டுமல்ல, புதிய வாழ்க்கையின் தொடக்கம். வேலை தேடும் டீல்களைச் சாமர்த்தியமாகக் கையாண்டால், ராஜபாட்டையில் அடியெடுத்து வைப்பீர்கள். குட் லக்!

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்