பின்னலாடை வர்த்தக சந்தைகளை வசப்படுத்தும் வங்கதேசத்தின் எழுச்சியால் வாய்ப்புகளை இழக்கும் இந்தியா

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வங்கதேச நாட்டில் பின்னலாடை தொழில் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் முதன்மை தொழிலாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் ஜவுளித்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி சந்தைகளான ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளிடையே வர்த்தக தளத்தை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகிறது. வங்கதேச நாட்டுக்கு தேவையான பின்னலாடை மூலப் பொருட்கள் 60 சதவீதம் இந்தியாவிலிருந்தும், 40 சதவீதம் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி இந்தியாவில் விற்கப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச ஆடை வர்த்தகம் எழுச்சி அடைந்திருப்பதால், இந்தியா தனது வாய்ப்புகளை இழக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதி யாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீ.மா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறியதாவது: வங்கதேசத்துக்கு இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் வரிச்சலுகை வழங்கியிருப்பது, ஒருவகையில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நாடு களிடையே 10.5 சதவீதம் வரிவிலக்கு இருப்பதால், இந்த தொழிலில் கோலோச்ச முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இறக்குமதி, ஏற்றுமதி என இரண்டுக்கும் வரியில்லாததால், இன்றைக்கு வங்கதேசம் ஆசிய கண்டத்தில் பின்னலாடை தொழிலில் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை எட்டி வருகிறது. 143 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலக நாடுகளிடையே ஒப்பிடும்போது வெறும் 3.8 சதவீதம் தான் பின்னலாடை உற்பத்தி நடக்கிறது. ஆனால், வங்கதேசம் 14 சதவீதத்தை எட்டியுள்ளது.

இன்றைக்கு பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் இலங்கைகூட 4 சதவீதத்தில் உள்ளது. வங்கதேசத்தில் இருந்து ஆடை இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்தியாவை காட்டிலும் துணி விலை கிலோவுக்கு ரூ.50 குறைவு என்பதால், ஆடையை குறைந்த விலைக்கு உள்நாட்டு சந்தைகளில் விற்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை வங்கதேசம் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களை இங்கு தொழில் செய்ய அழைப்பதை வரவேற் கிறோம். அதே சமயம், இங்குள்ள தொழில் நிறுவனங்களை கைவிடும் சூழல்தான் நிலவுகிறது. ஜவுளித் தொழிலுக்கு என்று திட்டங்கள் இல்லை. ஆட்சியாளர்கள் தொலை நோக்கு விஷயங் களை செய்யாததால், இன்றைக்கு இந்த தொழில் இந்தியாவில் படிப்படியாக அழிந்து வருகிறது. மத்திய அரசு எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் மாநில அரசும் இருந்து வருகிறது.

நூற்பாலைகளும் இன்று வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். செயற்கை இழை இன்றைக்கு இந்தியாவில் ஊடுருவத் தொடங்கியுள்ளது. இதனால், 55 சதவீதம் நூற்பாலைகள் மூடப்படும் சூழலில் உள்ளன. இப்படியே சென்றால் நூற்பாலைகள், உற்பத்தியாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையினர் என பலரும் ஜவுளி மற்றும் பின்னலாடை தொழிலில் இருந்து வெளியேறுவார்கள்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், அதன் முக்கிய உற்பத்தி பருத்தி. ஜவுளித்தொழிலுக்கு ஆதாரமாக உள்ள பருத்தி உற்பத்தியை விட்டு விவசாயிகள் பலர் வெளியேறிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்தியாவை பொருளாதார ரீதியாக காப்பாற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசுகள் அளிப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். குஜராத்தில் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்ட அறிவிப்புக்கு பின், அங்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

இதனால் ஒரு கிலோ நூல் உற்பத்தியில் ரூ.12 எஞ்சியதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேபோல, இன்றைக்கு தமிழகத்தில் நூற்பாலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இதனை மாநில அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் தொழில் துறையினர் கூறும்போது, “திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவடையும்போது, அது ஒட்டுமொத்தமாக மாநகரின் அனைத்து விதமான தொழில்களிலும் பாதிப்பை உண்டாக்கும். உதாரணத்துக்கு, பெட்டிக்கடை தொடங்கி தேநீர் கடை வரை இன்றைக்கு வியாபாரம் குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த தொழிலுக்கு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்யாமல், வெறும் உதட்டளவில் மட்டும் உள்ளது.

எனவே, ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழு அமைத்து, இந்த தொழிலை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கை மற்றும் வளர்ச்சிக்கான பாதைகளை கண்டறிய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். அப்போது தான் சீரான வளர்ச்சியை எட்ட முடியும். வங்கிகளில் கடன் கொடுப்பது தொடங்கி, இந்த தொழிலில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்