இந்தியாவில் எலக்ட்ரிக் கார் ஆலை அமைக்க டெஸ்லா பேச்சுவார்த்தை?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகளிடம் டெஸ்லா தரப்பில் பேசப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, இதில் வரிச்சலுகை மற்றும் அரசு வழங்கும் இன்னும் பிற சலுகைகள் சார்ந்தும் விரிவாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது எலான் மஸ்க் உடன் பேசி இருந்தார். இந்தச் சூழலில் டெஸ்லா இந்தியாவில் தடம் பதிக்க முயற்சித்து வருகிறது.

இந்தியாவில் மின் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், டெஸ்லா இதை முன்னெடுத்துள்ளது. இருந்தாலும், தங்களது சொந்த உதிரிபாக விநியோகச் சங்கிலியை இந்தியாவில் பயன்படுத்த டெஸ்லா விரும்புவதாக சொல்லப்பட்டுள்ளது. நாட்டில் அனுபவம் வாய்ந்த வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பல இருக்கும் நிலையில், டெஸ்லா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை அரசு தரப்பு அதிகாரிகளிடம் மட்டுமல்லாது, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்திடமும் (SIAM) டெஸ்லா தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக மஸ்க் இயங்கி வருகிறார். தற்போது சந்தையில் மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3 மற்றும் மாடல் ஒய் என நான்கு மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. ரோட்ஸ்டர் எனும் மினி லாரியையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE