இந்தியா-வங்கதேசம் இடையே ரூபாயில் வர்த்தகம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூபாயின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், பிராந்திய அளவிலான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச வங்கி கவர்னர் அப்துர் ரவுப் தலுக்தர் கூறியதாவது:

ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாய் ஆகிய இருநாட்டு கரன்ஸிகளின் பரிமாற்றத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பரிவர்த்தனை நடவடிக்கையால் இந்தியாவுடனான வர்த்தக செலவினம் கணிசமாக குறையும். இந்த புதிய பரிவர்த்தனை முறை வரும் செப்டம்பரிலிருந்து முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அப்துர் ரவுப் தலுக்தர் கூறினார்.

பணப்பரிவர்த்தனை அடிப்படையிலான இந்த புதிய வர்த்தக முறையை மேற்கொள்வதற்காக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள வங்கிகளில் நோஸ்ட்ரோ கணக்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கரன்சிகளின் பரிமாற்றத்துக்கு இந்த கணக்கு அவசியம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பரிமாற்ற விகிதம் நிர்ணயம் செய்யப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE