ஆன்லைன் கேமிங் மீது 28% வரி; புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர். முன்னதாக, ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

அதேநேரம், புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தியேட்டர் உணவுகளுக்கான வரி குறைவு: தியேட்டர்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், எல்டி ஸ்லாக் எனப்படும் சிமென்ட் வகை மற்றும் ஃப்ளை ஆஷ் எனப்படும் எரி சாம்பல் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இமிடேஷன் ஜரி நூல் வகை மீதான மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE