2075-ல் உலகின் 2வது பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும்: கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை

By செய்திப்பிரிவு

2075ல் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று கணித்து கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது.

மக்கள் தொகை, புத்தாக்கம், தொழில்நுட்பம், அதிகரிக்கும் மூலதன முதலீடுகள், உயரும் தொழிலாளர் திறன் ஆகியனவற்றில் அடிப்படையில் இந்த கணிப்பை நடத்தியுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் சார்பு விகிதம் (dependancy rates) என்பது மற்ற பிராந்தியங்களின் விகிதத்தோடு ஒப்பிடும்போது மிகமிகக் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. சார்பு விகிதம் என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு பொருள் ஈட்டும் நபரைச் சார்ந்திருப்போரின் விகிதத்தை குறிப்பிடுவது.

கோல்ட்மேன் சாக்ஸ் ஆராய்ச்சிக் குழுவின் இந்தியப் பொருளாதார நிபுணர் சாந்தனு சென்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் உற்பத்தித் திறன், மூலதன முதலீடுகள் மற்றும் புத்தாக்கம் ஆகியன நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும். நாட்டின் மக்கள் தொகை வளம் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்தும் காரணியாக இருந்துவிட இயலாது. புத்தாக்கமும், அதிகரித்து வரும் தொழிலாளர் உற்பத்தித் திறனும் தான் இதனை ஊக்குவிக்கும். இவைதான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசான இந்தியாவை மேலும் முன்னேற்றப் போகிறது. இந்தியாவில் சார்பு விகிதம் குறையும் போது சேமிப்பு விகிதம் அதிகரிக்கும். அதிகரிக்கும் வருவாய், ஆழமான நிதித்துறை வளர்ச்சி மூலம் மூலதன முதலீடுகளையும் அதிகரிக்க இயலும். இதுவும் சேமிப்பை அதிகரிக்கும்." என்றார்.

இத்தகைய சூழலில் இந்திய அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலை வசதி, ரயில்வே மேம்பாடு ஆகியனவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அதனால், தனியார் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இதுவே உகந்த தருணம் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வீழ்ச்சி அபாயம்: இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படுமேயானால் அது பொருள் ஈட்டும் தகுதியுடைய தொழிலாளர் சக்தி (லேபர் ஃபோர்ஸ்) பங்களிப்பு வளர்ச்சி காணாமல் இருந்தால் மட்டுமே நிகழும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இந்த விகிதம் படிப்படியாக குறைந்துள்ளது. அதுவும் மகளிர் பங்களிப்பு ஆண்களை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என்றும் அதில் ஒரு கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE