அம்மாடியோவ்... ஒரு கிலோ தேயிலை தூள் ரூ.85,000 - இது உதகை ஸ்பெஷல்!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 16 அரசு மற்றும் 180 தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாரத்துக்கு சுமார் 15 லட்சம் கிலோ தேயிலை தூள் ஏலமையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. பெருவாரியாக ஆர்தோடக்ஸ், சிடிசி டஸ்ட் ஆகிய இரு ரகங்கள் ஏலம் விடப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் தேயிலை தூள் அரசு ஏல மையமான இண்ட்கோசர்வ் மற்றும் தனியார் ஏல மையமான குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் மூலம் ஏலம் விடப்படுகிறது.

மாறிவரும் சீதோஷ்ண நிலை, வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்றவற்றால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் தேயிலையின் தரம் குறைந்து அதற்கான விலையும் கிடைக்காமல் போவதால், 180 ஆண்டு பழமையான தேயிலைத் தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில், மதிப்புக்கூட்டப்பட்ட சிறப்பு தேயிலைகளான வயிட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ ரகங்கள் அதிக விலைக்கு விற்கப் படுகின்றன. இந்த ரக தேயிலையின் அளவு குறைவு என்பதால், அவற்றின் விலை அதிகமாகும்.

சிறப்பு தேயிலைகளில் பழங்கள், வாசனை திரவியங்கள் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட சுவைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சிறப்பு தேயிலை தூள் கிலோ ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. ‘பிளாக் டீ’ தேயிலை தூள் கிலோ ரூ.85 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விலை உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனிநபர் அருந்தும் தேநீர் அளவை கணிசமான அதிகரிக்கும் நோக்கில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சிறப்பு வகையான ஸ்பெஷாலிட்டி தேயிலை தூளை சுற்றுலா பயணிகளிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேநீர் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த தேநீர் மையத்தில் சிறப்பு தேயிலை தூளும், தேநீரும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேநீர் மைய நிர்வாகி நிர்மல் கூறும் போது, ‘‘தேயிலை தொழில்துறையில், சேவைக்காக இந்திய தேயிலை வாரியத்தின் ஆதரவு பெற்ற முதல் தேநீரகம் இதுவாகும். தேயிலை வாரியம் மூலம் பிரத்யேக தேயிலைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சந்தை இடமாகவும் இது உள்ளது.

எங்களின் 80 சதவீத தேயிலைத் தூள்இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள்மற்றும் சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ தேயிலை ரூ.400 முதல் ரூ.85000 வரை விற்பனையாகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE