வருவாய் இழப்பை ஈடுகட்ட தென்னந்தோப்பில் தேனீ வளர்ப்பு: மாற்றி யோசித்த பொள்ளாச்சி விவசாயிகள்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அத்தகைய சிறப்பு கொண்ட தேனீக்களை வளர்த்து, வருவாய் இழப்பை ஈடுகட்டி வருகின்றனர் பொள்ளாச்சியை சேர்ந்த தென்னை விவசாயிகள். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை மற்றும் இளநீர் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் தஞ்சாவூர் வாடல், கேரள வாடல், கருந்தலை புழுக்கள், வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டது. சில இடங்களில் பாதிக்கப்பட்ட மரங்களை விவசாயிகள் வெட்டி, அழித்து வருகின்றனர். நோய் தாக்குதலுக்கு உள்ளான தென்னையில் காய்ப்புத்திறன் குறைந்து, தேங்காய் பருப்பின் அளவு சிறுத்து காணப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களாக தேங்காயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், விவசாயிகள் வருவாய் இழப்பால் தவித்து வருகின்றனர். தென்னையில் காய்ப்புத்திறனை மீட்டு எடுப்பதுடன், கூடுதல் வருவாயை பெறவும் தேனீ வளர்ப்பை பொள்ளாச்சி விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘தென்னை சாகுபடியில் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க தென்னந்தோப்பில் பெட்டிகள் வைத்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். இதனால், தென்னையில் காய்ப்புத் திறன் குறைந்த மரங்களில் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் நெட்டை, குட்டை என பல்வேறு ரக தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் அயல் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற உதவுகிறது.

இதனால் விவசாயத் தோட்டங்களில் பெட்டி முறை தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். ஓர் ஏக்கரில் 15 முதல் 20 பெட்டிகள் வரை வைத்து தேனீக்கள் வளர்க்கலாம். 60 நாட்களுக்கு ஒருமுறை தேன் சேகரிக்கலாம். தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE