கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் விவசாயிகளின் கவனம் ஈர்த்த ‘ஆல் டைம் மாங்கோ’

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் தாய் லாந்து நாட்டில் சாகுபடி செய்யப்படும், ‘ஆல் டைம் மாங்கோ’ விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து, இந்த ரகம் உள்ளிட்ட விவசாயிகள் விரும்பும் புதிய ரக செடிகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.

மாம்பழம் மற்றும் மாங்காயை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுவதன் மூலம் லட்சக் கணக்கான விவசாயிகளும், சார்பு தொழிலாளர்களும் பயன்பெற்று வருகின்றனர்.

அரங்கை அலங்கரிக்கும் 142 ரகம்: மா விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், ஆண்டுதோறும் அரசு சார்பில் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் 29-வது மாங்கனி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் முதல் முறையாக 142 ரக மாங்காய்கள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தாய்லாந்து, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் சாகுபடி செய்யப்படும் மாங்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், தாய்லாந்தில் சாகுபடி செய்யப்படும், 'ஆல் டைம் மாங்கோ' ரகம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மா ரகங்களை விரும்பும் விவசாயிகளுக்குத் தேவைக்கு ஏற்ப செடிகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

புதிய ரகங்கள்: இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் பூபதி, ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது: மா விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மா விவசாயிகள் புதிய ரகங்களை அறியும் வகையில் மத்திய பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் மாங்கனிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, தாய்லாந்து நாட்டில் ஆண்டு முழுவதும் மகசூலை தரும் 'ஆல் டைம் மாங்கோ' ரகம், ஆந்திர மாநில விவசாயியிடம் இருந்து பெறப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் மகசூல்: மேலும், வங்கதேசத்தில் சாகுபடி செய்யப்படும் ‘ஹிம் சாகர்’, ‘மால்டாபாசில்’ ரக மாங்காய்களும் ஆண்டு முழு வதும் மகசூல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும்.இந்த ரக மாஞ்செடிகளை அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கண்காட்சியைப் பார்வையிடும் விவசாயிகள் இந்த ரகங்களை தங்கள் நிலத்தில் சாகுபடி செய்ய விரும்பினால், இது தொடர்பாகத் தேவையான ரகம் குறித்து தோட்டக்கலைத் துறையை அணுகித் தெரிவித்தால், செடிகள் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

50 வகையான மாங்கன்று: மேலும், மாவட்டத்தில் அரசுப் பண்ணையில் ஏற்கெனவே 50 ரக மாஞ்செடிகள் தரமாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE