கலாநிதி மாறனுக்கு ரூ.380 கோடி வழங்க வேண்டும்: பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு வழங்க வேண்டிய ரூ.380 கோடி வட்டித் தொகையை முழுமையாக வழங்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், 2015-ம் ஆண்டு கலாநிதி மாறன் தன் வசமிருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும், அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அஜய் சிங்கிடம் விற்றார்.

அந்த சமயத்தில், நிறுவனத்தின் நடைமுறை செலவுகள், கடன் தவணை செலுத்துதல் உள்ளிட்டவற்றில் கலாநிதி மாறன் பங்களிப்பு வழங்கி இருந்தார். இதற்கான தொகையாக ரூ.679 கோடியை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனக்குதர வேண்டும் என்று கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு ரூ.580 கோடி அசல் தொகையை வழங்கியது. ஆனால், வட்டியை வழங்கவில்லை.

இந்நிலையில் வட்டித் தொகையில் ரூ.75 கோடியை மூன்று மாதங்களுக்குள் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.380 கோடி வட்டித் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE