கூட்டுறவே நாட்டுயர்வு - சாதித்த ‘கொடிசியா’

By இல.ராஜகோபால்

கோவை: ஒற்றுமை, கூட்டு முயற்சியின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக உலகளவில் பெயர் பெற்று விளங்கும் ‘கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகம்’, தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கரோனா தொற்று பரவல் காலங்களில் மக்களின் உயிர்காக்கவும் முக்கிய பங்கு வகித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

தொழில் நகரான கோவை மாவட்டத்தில் சிறு தொழில்முனைவோர் ஒன்றிணைந்து உருவாக்கியது ‘கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா)’. கோவையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தொழில்துறையினர் உலகளவில் சந்தைப்படுத்த உதவும் வகையில், கொடிசியா சார்பில் வர்த்தக கண்காட்சி வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவிநாசி சாலையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் ஏ, பி, சி, டி, இ உள்ளிட்ட தனித்தனி குளிர்சாதன வசதி கொண்ட கண்காட்சி அரங்குகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர திறந்தவெளி தியேட்டர், மூன்று கருத்தரங்கு அறைகள், உணவகம் அமைக்க பிரத்யேக பகுதி (புட்கோர்ட்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளது. ஜெனரேட்டர் உள்ளிட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி வளாகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த வளாகத்தில் உள்ளன. தொழில் சார்ந்த கண்காட்சிகள் மட்டுமின்றி கல்வி கண்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட விசேஷங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

கொடிசியா என்றாலே கண்காட்சி வளாகம் தான் என்று மக்கள் மத்தியில் நிலவி வந்த மனப்பான்மை 2020-ம் ஆண்டு முதல் முற்றிலும் மாறியது. காரணம் கரோனா தொற்று பரவிய காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியா வளாகம் பயன்படுத்தப்பட்டது. இந்த மையத்தால் கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின்கீழ் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் நோய்தொற்று பரவலின்போது அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சிகிச்சையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

இன்று கோவை என்றால் உலகம் முழுவதும் உள்ள தொழில்துறையினர் மத்தியில் இந்த கண்காட்சி வளாகம் நினைவுக்கு வரும் அளவுக்கு இந்த மையத்தில் பல்வேறு சர்வதேசதொழில் கண்காட்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தொழில், கலை நிகழ்ச்சிகள், சுகாதார பணிகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் வேளாண் துறை வளர்ச்சிக்கும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் குறிப்பிடத்தக்க பங்களித்து வருகிறது.

வேளாண் துறை சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்கு உள்ளிட்டவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். கூட்டு முயற்சியால் கிடைக்கும் வெற்றியின் சான்றாகவும், பலரையும் ஊக்குவிக்கும் கட்டமைப்பாகவும் எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த வளாகம் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE