தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை கணிசமாக உயர்வு... காரணம் என்ன?

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: கோடை மழையால் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்ததால், தமிழகம் முழுவதும் எள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதனால், நல்லெண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

எண்ணெய்வித்துப் பயிர்களில் அதிக அளவில் நுகர்வு பொருட்களாக உள்ளவற்றில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய் ஆகியவை பிரதான இடம் பிடிக்கின்றன. இதில் உடல் சூட்டைக் குறைத்து, உடலுக்கு நன்மை பயக்கும் நல்லெண்ணெய் முக்கிய பங்கை வகிக்கிறது. நல்லெண்ணெய் எள்ளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.

எள் நம் நாட்டு எண்ணெய் வித்துப் பயிர் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. நாடு முழுவதும் தமிழகம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா என குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் எள் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் ஈரோடு, விழுப்புரம், கரூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.50 லட்சம் ஏக்கரில் பல்வேறு பருவங்களில் எள் பயிரிடப்படுகிறது. விதைத்து 85 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்த பயிருக்கு சாகுபடி செலவும், தண்ணீரும் அதிகம் தேவையில்லை. ஏக்கருக்கு ஏறத்தாழ 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளில் முதல் ரக எள் அதிகபட்சமாக கிலோ ரூ.120 வரை விற்பனையான நிலையில், தற்போது அறுவடையாகி வரும் எள் கிலோ ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக நல்லெண்ணெய் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஆர்.சுகுமார் `இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: குறைந்த நாட்களில் அதிக வருமானம் தரும் பயிராக எள் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் மாசிப் பட்டத்தில் அதாவது பிப்ரவரி மாத மத்தியில் எள் விதைக்கப் படுகிறது. இவை மே மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை அறுவடைக்கு வரும்.

இந்த ஆண்டு சில இடங்களில் காலதாமதமாக பயிரிடப்பட்டதால் ஜூலை மாத இறுதி வரைக்கும் அறுவடை நடைபெறும். ஆனால், கடந்த மாதம் திடீரென பெய்த கோடை மழையால் சில இடங்களில் எள் பயிருக்கு நன்மை கிடைத்தாலும், பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், விளைச்சல் குறைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் அதிக அளவில் எள் பயிரிடப்படும் பகுதியான லால்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மறைமுக ஏலம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

இதில் இந்த ஆண்டு இதுவரை மிகக்குறைந்த அளவிலேயே எள் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் எள் (100 கிலோ) ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. இந்த விலை அப்படியே இன்னும் சில மாதங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்றார்.

இது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் எள் கமிஷன் மண்டியைச் சேர்ந்த பிரபா கூறியது: இந்த ஆண்டு எள் கிலோ ரகத்துக்கு தகுந்தாற்போல ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனையாகிறது. ஆண்டுதோறும் திருச்சி எள் கமிஷன் மண்டிக்கு 75 கிலோ மூட்டைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 25 சதவீதம் அளவுக்குக் கூட வரவில்லை.

இதற்கு காரணம் விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகள் நேரடியாக கிராமங்களுக்கே சென்று விவசாயிகளிடம் எள் கொள்முதல் செய்து விடுகின்றனர். மேலும், மழையில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் மகசூலும் குறைந்து விட்டது. இந்த விலை வரும் தீபாவளி பண்டிகை வரை குறையாது என்றார்.

மரச்செக்கு நல்லெண்ணெய் 1 லிட்டர் விலை ரூ.460: மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் கோபு கூறியது: கடந்த ஆண்டில் கிலோ ரூ.120-க்கு தான் எள் கொள்முதல் செய்தோம். தற்போது தரமான எள் கிலோ ரூ.160-க்கு கொள்முதல் செய்கிறோம். ஒரு கிலோ எள்ளில் அதிகபட்சமாக மரச் செக்கில் அரைக்கும் போது 600 மில்லி லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

இரும்பு செக்குகளில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஒரு லிட்டர் மரச்செக்கு நல்லெண்ணெய் ரூ.380-க்கு விற்பனை செய்தோம். தற்போது எள் விலை உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் ரூ.460-க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE