பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துமா?

By ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

கரோனா பெருந்தொற்று, அதன்பிறகு உக்ரைன் – ரஷ்யா போர் ஆகிய முக்கிய காரணங்களால் பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, டாலர் அச்சடித்து மக்களுக்கு கரோனா நிவாரணமாக வழங்கியது. இதன் காரணமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார இறுக்கம் நீங்கவில்லை.

இந்த சூழ்நிலையில், இந்தியா ஒரு பிரகாசமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளது. காரணம், நமது நாட்டில், 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி வீதம், 7.2 சதவீதமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, நமது நாட்டில், இளைய தலைமுறை எண்ணிக்கை மற்றும் திறன்மிக்க மக்கள் வளம் அதிகம் உள்ளது. மேலும், நமது உற்பத்தித் துறையில் புள்ளிவிவரங்கள் வளர்ச்சிக் கணக்கைக் கொடுக்கிறது. நாட்டின் வர்த்தக நிலவரத்தின் கண்ணாடியாக திகழும் ஜிஎஸ்டி வசூல் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

அதேநேரம் சராசரி மனிதனின் வாழ்க்கையில் பணப்புழக்கம் அதிகமாக இல்லை. சிறு தொழில் அமைப்புகளுக்கான தொழில் வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அதனால், ஏழை, நடுத்தர மக்களின் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, நாட்டின் ஏற்றுமதி நிலவரம் பெருமளவு சரிந்து வருகிறது. இதனால், இறக்குமதி பொருள்கள் விலை அதிகரிக்கும். ஏற்றுமதியை நாம் அதிகரிப்பதன் மூலமே, அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.

அமெரிக்க பயணம்: பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அரசியலைத் தாண்டி, இந்த பயணத்தின் மூலம் பொருளாதார பலன்கள் என்ன என்று பார்ப்போம்:

இந்த பயணத்தின் போது 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றில் ஐந்து ஒப்பந்தங்கள் முக்கியமானவை.

ராணுவ போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக, ‘எப் 414’ ரக, ஜெட் போர் விமான இன்ஜின்களை, நமது நாட்டிலேயே தயாரிப்பதற்கானது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன், நமது நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி, ‘தேஜஸ்’ போர் விமானங்களில் கூட நமது ஜெட் இன்ஜின்களையே பயன்படுத்த முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிறகு இந்தியா இனி சொந்தமாக ஜெட் இன்ஜின்களை தயாரிக்க முடியும்.

உள்நாட்டிலேயே முதன்முறையாக, செமி கண்டக்டர் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. அவற்றைப் பெற, சீனா உள்ளிட்ட பிற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டி இருந்தது. ‘மைக்ரான்’ நிறுவனம், குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் உற்பத்தி மையம் தொடங்க உள்ளது.

ராணுவத்திற்காக ட்ரோன்களை, அமெரிக்காவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இந்த ட்ரோன்கள் முக்கியமானவை. இது இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகளை உருவாக்கும். 2025-ம் ஆண்டு, நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. இது தொடர்பானஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் நாசாவும், இஸ்ரோவும் இணைந்து பணியாற்றும்.

ஆக, நமது நாட்டின் சுயசார்பு, பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய ஒப்பந்தங்களை எளிதாக சாதித்திருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு, அவர் உருவாக்கி இருக்கும், நமது நாட்டின் மீதான மதிப்பும், பொருளாதார பலமும் அடிப்படை காரணம்.

அத்துடன் பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். மின்சார கார்கள் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் ஆக இருக்கும் டெஸ்லா, இந்தியாவில் கால் பதித்து கார் உற்பத்தியில் முத்திரை பதித்தால், வாகன எரிபொருள் வாங்குவதற்கு செலவிடப்படும் நமது அன்னியச் செலாவணி மிச்சமாகும். சுற்றுச்சூழல் மேம்படும்.

இதுதவிர கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்ய போவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால் ஏராளமான வேலை வாய்ப்பு உருவாகும். பொருளாதார வளர்ச்சியும் இன்னும் வேகம் எடுக்கும்.

அமெரிக்காவின் உயரிய ட்ரோன் தொழில்நுட்பம் நமது பாதுகாப்புத் துறைக்கு கிடைத்திருப்பதும் அப்படித்தான். சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை சிந்தித்து வந்த அமெரிக்கா, இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாகவும் நம்மை மதிக்கிறது.

பிரதமரை அமெரிக்கா வரவேற்றதும், முக்கிய ஒப்பந்தங்கள் நமக்கு கிடைத்திருப்பதும், இந்திய – அமெரிக்க வரலாற்றில் இந்தியாவுடன் சேர்ந்தால் அமெரிக்காவும் வளரலாம். அமெரிக்காவுடன் இணைந்தால், இந்தியாவும் வளர முடியும் என்ற கணக்கில், பிரதமரின் அமெரிக்க பயணமும், அதனால் கிடைத்த பலன்களையும் நாம் அர்த்தம் கொள்ளலாம்.

karthi@gkmtax.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE