மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஓசூர் ‘ஹோஸ்டியா’ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஓசூர்: தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என ஓசூர் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் வேல்முருகன் கூறியதாவது: தொழில் நகரமான ஓசூரில் பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் ஆயிரக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இங்கு குண்டூசி முதல் விமான பாகங்கள், ராணுவத் தளவாடங்கள் வரை உற்பத்தி செய்யப் படுகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 14 பைசா முதல் 21 பைசா வரை அரசு உயர்த்தி உள்ளது. இதனால், சிறு, குறுந்தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழிற்சாலைகள் மீள முடியாத நிலையில் மின் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

எனவே, சிறு தொழிற்சாலைகளைக் காப்பாற்ற மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE