பி.ஹெச்.இ.எல். நிகரலாபம் சரிவு

பொதுத்துறை நிறுவனமான பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தின் 2013-14-ம் நிதி ஆண்டின் நிகரலாபம் பாதியாக சரிந்திருக்கிறது. உள்நாட்டு தேவை குறைவு மற்றும் விற்பனை தொய்வால் நிறுவனத்தின் நிகரலாபம் பாதியாக குறைந்து ரூ.3,228 கோடியாக சரிந்திருக்கிறது.

கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் நிகரலாபம் 6,615 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் விற்பனையும் கணிசமாக சரிந்திருக்கிறது. 2012-13-ம் நிதி ஆண்டில் 50,156 கோடி ரூபாயாக இருந்த விற்பனை இப்போது 40,366 கோடி ரூபாயாக சரிந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்திய மின்சாரத்துறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை, நிலக்கரி பிரச்சினை, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் சில திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.

புதிய ஆர்டர்களும் குறைந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2012-13 நிதி ஆண்டில் 31,650 கோடி ரூபாய் அளவுக்கு புதிய ஆர்டர்கள் நிறுவனத்துக்கு கிடைத்தது. ஆனால் 2013-14-ம் நிதி ஆண்டில் 28,007 கோடி ரூபாய் ஆர்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. மொத்தமாக 1,01,538 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.

செலவுகளை குறைத்தல், டெக்னாலஜியை பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் லாப வரம்பு அதிகரித்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் 13,452 மெகா திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், இது இதுவரை இல்லாத அளவு என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பிறகு எல்.ஐ.சி. நிறுவனம் 4 சதவீத பி.ஹெச்.இ.எல். பங்குகளை கடந்த மாதத்தில் வாங்கியது. மார்ச் மாத முடிவில் இந்த நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்கு 63.06 சதவீதமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE