‘இ-நாம்’ திட்டத்தால் இடைத்தரகர்களுக்கு ‘தடா’ - விவசாயிகள் மகிழ்ச்சி

By எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் இடைத்தரகர்களின் தலையீடின்றி ‘இ-நாம்’ திட்டம் மூலம் மக்காச்சோள விற்பனையில் நேரடியாக ஈடுபட்டு, விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை,குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்று வட்டாரங்களில் தென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் (சுமார்10,000 ஹெக்டேர்) மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. மாடு,கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான தீவன தயாரிப்பில் இதன் தேவை அதிகளவில் இருப்பதால் விவசாயிகளும் ஆண்டுதோறும் மக்காச்சோள சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்த விவசாயிகளுக்கு குறைந்த லாபமே கிடைத்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசுஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக இ-நாம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விளை பொருளை நேரடியாக தேவைப்படும் நிறுவனங்களுக்கோஅல்லது அதிக விலை தரும் மொத்த விற்பனையாளருக்கோ விவசாயிகள் விற்பனை செய்ய முடியும். கடந்த சிலஆண்டுகளாக இ-நாம் திட்டத்தை பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் கிலோ ரூ.20 என்ற அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். இ-நாம் திட்டத்தின் மூலம் மக்காச்சோளம் கிலோ ரூ.23 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில் 2,000 டன் அளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 400 விவசாயிகள் ரூ.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். தற்போதைய நிலையில் 500 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்காக 5,000 டன் இருப்பு வைக்கும் வகையில் 8 குடோன்களும், 100-க்கும் மேற்பட்ட உலர் கலங்களும் உள்ளன.

மக்காச்சோளத்துக்கான தேவை இருந்துகொண்டே இருப்பதால், உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கும் உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE