கோவையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா காலனியில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் உள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், குண்டல் பேட், கோலார் உள்ளிட்ட கர்நாடாகாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் டன் கணக்கில் தக்காளி கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூலம் உழவர் சந்தைகளிலும் நேரடியாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், உற்பத்தி பாதிப்பு, கர்நாடகாவில் பெய்துவரும் மழை உள்ளிட்ட காரணங்களால் கோவை மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது.

இதனால் விலை உயர்ந்துள்ளது. தியாகி குமரன் மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ராஜேந்திரன் கூறும்போது, ‘‘சில வாரங்களுக்கு முன்பு வரை எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக 300 டன் அளவுக்கு தக்காளி வரத்து இருந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக 50 டன் அளவுக்கு மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக 15 கிலோ பெட்டி ரூ.1,500-க்கும், 25 கிலோ பெட்டி ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சில்லரை விற்பனையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு அடுத்த சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் காய்கறிகளில் தக்காளி முக்கியமானதாகும். எனவே, தக்காளியின் விலையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE