ஈரோட்டில் ஒரு கிலோ பச்சைமிளகாய் ரூ.130-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தையில், தக்காளியைத் தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும் நேற்று (27-ம் தேதி) சதமடித்து, கிலோ ரூ.130-க்கு விற்பனையானது.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தையில், 700-க்கும் மேற்பட்ட காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, இங்கு காய்கறிகள் வரத்தாகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைவதால், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனையான நிலையில், நேற்று முன்தினம் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் 1,000 கிலோ தக்காளி மட்டும் சந்தைக்கு வரத்தானதால் விலை உயர்ந்த நிலையில், நேற்று 3,000 கிலோ தக்காளி வரத்தானது. இதனால், தக்காளி விலை ரூ.80 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் பச்சைமிளகாய் விலை கிலோ ரூ.130-க்கு உயர்ந்தது. ஈரோடு காய்கறி சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தாளவாடி, பெங்களூரு போன்ற பகுதியிலிருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மழை உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்த நிலையில் பச்சை மிளகாய் விலையும் சதமடித்துள்ளது. இஞ்சியின் விலை கிலோ ரூ.220-க்கு விற்பனையானது

ஈரோடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் விலை (கிலோவுக்கு): இஞ்சி - ரூ.220, பச்சை மிளகாய் - ரூ.130, தக்காளி, கேரட் - ரூ.80, சின்ன வெங்காயம், பீர்க்கங்காய் - ரூ.70, பாவக்காய் - ரூ.65 , கொத்தவரங்காய், பீட்ரூட், முருங்கைக்காய் - ரூ.60, கத்தரிக்காய், புடலங்காய் - ரூ.50, வெண்டைக்காய், காலிபிளவர் - ரூ.40, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் - ரூ.30, முட்டைக்கோஸ் - ரூ.25, சுரைக்காய் - ரூ.20.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE