புதுடெல்லி: சமீபத்தில் கிலோ ரூ.10 முதல் ரூ.20- வரையிலான விலையில் விற்கப்பட்ட தக்காளி இப்போது திடீரென அதிகரித்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக வரத்து குறைந்தே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.
தக்காளியின் இந்த திடீர் விலை அதிகரிப்பு குறித்து மும்பையைச் சேர்ந்த பொருள்கள் சந்தை நிபுணரும், கேடியா அட்வைசரியின் தலைவருமான அஜய் கேடியா கூறுகையில், "பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளி குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பீன்ஸ் விலை உயர்ந்ததால், பல விவசாயிகள் இந்த ஆண்டு பீன்ஸ் விதைத்தனர். என்றாலும் பருவ மழை சரியாக பெய்யாததால் பயிர்கள் கருகி வீணாகின. வெப்ப அலை மற்றும் கனமழை காரணமாக காய்கறிகள், குறிப்பாக தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது" என்றார்.
"கடந்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. கனமழை காரணமாக இந்த திடீர் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த முகம்மது ராஜூ.
தென் மாநிலமான கர்நாடகாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சதத்தை எட்டியுள்ளது. கனமழையால் பயிர்கள் சேதமடைந்தது, போக்குவரத்து சிக்கல் போன்ற காரணங்களால் மாநிலத் தலைநகர் பெங்களூருவில் தக்காளி விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. மழையால் பயிர்கள் சேதமாடைந்தது விலை உயர்வுக்கு காரணம் என்கிறனர் வியாபாரிகள்.
"முன்பு தக்காளி கிலோ ரூ.30-க்கு வாங்கினேன், அதற்கு பிறகு ரூ.50-க்கு வாங்கினேன், இப்போது தாக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது” என்ற பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் கவுர், "விலை இன்னும் அதிகமாகும், ஆனாலும், எதுவும் செய்ய முடியாது. எப்படியிருந்தாலும் வாங்கித்தான் ஆகணும்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
» அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு ஜூலை 11 வரை நீட்டிப்பு: EPFO அறிவிப்பு
» வேலைக்கு லஞ்சம் சர்ச்சை: குற்றச்சாட்டை மறுக்கும் டிசிஎஸ் நிர்வாகம் சொல்வது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன்பு கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கான்பூர் காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "தக்காளி அதிகம் விளையும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் பயிர்கள் அழிந்துவிட்டன. அதனால், கடந்த பத்து நாட்களில் விலை உயர்ந்து விட்டது. இது இன்னும் அதிகரிக்கும்" என்றார்.
மற்றொரு வியாபாரியான லக்ஷ்மி தேவி கூறுகையில், "தக்காளி பெங்களூருவில் இருந்துதான் வரவேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் தக்காளி விலை உயரும். ஆனால், இந்த ஆண்டு மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. விலை இன்னும் அதிகரிக்கும்" என்றார்.
கனமழை காரணமாக கர்நாடகாவில் தக்காளி அதிகம் விலையும் மாவட்டங்களான கோலார், சிக்கபெல்லாபுர், ராமநாகரா, சித்ரதுர்கா, மற்றும் பெங்களூரு கிராமங்களில் குறிப்பிட அளவில் தக்காளி உற்பத்தியும், விநியோகமும் குறைந்துள்ளது.
கான்பூர் சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வரத்து தட்டுப்பாடு சாமனிய மக்களின் வாங்கும் சக்தியை மிகவும் பாதித்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.80 - ரூ.90-க்கு விற்கப்படும் தக்காளி சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையுர்வு குறித்து வருத்தப்படும் கான்பூர்வாசியான கோபால், "தக்காளி விலை உயர்ந்துகொண்டே போனால் உணவில் தக்காளி சேர்ப்பதை நிறுத்த வேண்டியதுதான். இப்படி விலை உயர்ந்தால் என்னைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் எப்படி காய்கறி வாங்குவது?" என்றார்.
கான்பூர் சந்தையின் தக்காளி வியாபாரி ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களாகத்தான் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது. எங்களுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி கிடைப்பது இல்லை. கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் இருந்து தக்காளி வரத்துக்காக காத்திருக்கிறோம். வரும் நாட்களில் தக்காளி ரூ.150 வரை உயரலாம்" என்றார்.
நுகர்வோர் நலன் துறையின் கீழ் இயங்கும் விலை கண்காணிப்பு பிரிவின் தகவல்களின் படி, சில்லறைச் சந்தையில் சராசரியாக தக்காளி விலை ரூ.25 முதல் ரூ.45 வரை அதிகரித்துள்ளது. சில்லைச் சந்தையில் அதிகபட்சமாக தக்காளி கிலோ ரூ 83 - 113 வரை விற்பனையாகிறது. மொத்த சந்தைகளில் முக்கியமான காய்கறிகளின் விலைகள் ஜூன் மாதத்தில் சராசரியாக 60 முதல் 70 சதவீதம் உயர்ந்திருந்தது.
தமிழகத்தின் நிலவரம் என்ன? - சென்னை - கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.64-க்கு விற்கப்பட்டது.
இந்த ஆண்டு கோடையில் கடும் வெயில் வாட்டியது. வழக்கமாக கோடைக் காலத்தில், பாசன நீர் பற்றாக்குறை, கடும் வெயிலில் செடிகள் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் தக்காளி உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயரும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2-வது வாரம் வரை தக்காளி விலை குறைவாக இருந்தது. அதன் பிறகு விலை ஏற்றம் அடைந்து கோயம்பேடு சந்தையில் நேற்று முதல்தர தக்காளி, மொத்த விலையில் கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது. இது சில்லறை விற்பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.
டியூசிஎஸ் பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் தக்காளி கிலோ ரூ.64-க்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி காரச்சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளும் தக்காளி வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ ரூ.70, கேரட் ரூ.45, சாம்பார் வெங்காயம் ரூ.40, பாகற்காய் ரூ.30, பீட்ரூட், நூக்கல் தலா ரூ.25, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, வெங்காயம் ரூ.11, முருங்கைக்காய் ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்கப்பட்டது.
தக்காளி விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது: கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாகத் தினமும் 800 டன் தக்காளி வரும். ஆனால் நேற்று 350 டன் மட்டுமே வந்தது. அண்மையில் தக்காளி விலை குறைந்ததால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவதைக் கடந்த 2 மாதங்களாகத் தவிர்த்துவிட்டனர். சிலர் மட்டுமே பயிரிட்டுள்ளனர்.
தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளது. அங்கு தக்காளி வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூரில் கவலைக்குரிய நிலவரம்: மகசூல் பாதிப்பால் ஓசூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தக்காளிக்கு வரவேற்பு இருப்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ ரூ.10 முதல் 18 வரை விற்பனையானது.
இந்நிலையில், தக்காளியில் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு, சில நாட்களாகச் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனையான தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
இது தொடர்பாக ஓசூர் உழவர் சந்தை அலுவலர் கூறும்போது,“ஓசூர் உழவர் சந்தைக்குத் தினசரி 8 டன் தக்காளி வரை தக்காளி வரத்து இருக்கும். தற்போது, வெயில் தாக்கம் மற்றும் நோய் தாக்கத்தால் செடிகள் பட்டுப்போகின. இதனால், மகசூல் குறைந்துள்ளது. எனவே, விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago