எத்தனாலில் ஓடும் வாகனம் அறிமுகப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி கார் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் என்பதுடன் 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும்.

எதிர்காலத்தில் அறிமுகமாகும் புதிய வாகனங்கள் முழுக்க எத்தனாலில் இயங்கும் வகையில் இருக்க வேண்டும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரை சமீபத்தில் நான் சந்தித்துப் பேசிய நிலையில் அந்த நிறுவனம் மின்சார வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் என்னிடம் உறுதியளித்துள்ளார். முழுவதும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வகையில் இருக்கும்.

தட்பவெப்ப சூழ்நிலை மாறியுள்ளதால் தற்போது 47 டிகிரி வரை வெப்பம் தகிக்கிறது. இதில், நமது ஓட்டுநர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை உணர்ந்துதான் டிரைவர் கேபினில் ஏசி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான், டிரக் டிரைவர்கள் ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் டிரக் ஓட்டுநர்களின் வேலை நேரத்துக்கு விதிமுறைகள் உள்ளன. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஏசி கேபின்கள் பொருத்தப்பட்ட டிரக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்த கட்டாய விதிமுறை வரும் 2025-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE