தரை, வான், கடல் எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் இருந்து 31 அதிநவீன ட்ரோன்களை வாங்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம் அதிநவீன எம்கியூ-9 ரீப்பர் அல்லது பிரிடேட்டர்-பி ரக ட்ரோன்களை தயாரிக்கிறது. எல்லை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த பயன்படும் இது, 40 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஹெல்பயர் ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை ஏந்திச் செல்லும் இவற்றை துல்லிய தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். சீனாவிடம் இப்போது உள்ள ஆயுதம் சுமந்து செல்லும் ட்ரோன்களை விட திறன் வாய்ந்தது இந்த எம்கியூ-9.

இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து 31 எம்கியூ-9 ரக ட்ரோன்களை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் குழு கடந்த 15-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், 31 ட்ரோன்களை வாங்குவது தொடர்பான நடைமுறை ஜூலை மாதம் முறைப்படி தொடங்க உள்ளது. இது தொடர்பான வேண்டுகோள் கடிதம் (எல்ஓஆர்) ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

முப்படைக்கு.. இதில் 15 ட்ரோன்கள் கடற்படை சார்பில் கண்காணிப்புப் பணியில் பயன்படுத்தப்படும். இதுபோல ராணுவம் (தரைப்படை) மற்றும் விமானப்படை சார்பில் தலா 8 ட்ரோன்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நாட்டின் உளவு மற்றும் கண்காணிப்பு திறன் மேம்படுவதுடன் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் திறனும் அதிகரிக்கும்.

இதன் மொத்த மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி ஆகும். முதல் 10 ட்ரோன்கள் ஒப்பந்தம் கையெழுத்தான 2 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. 6 முதல் 7 ஆண்டுகளில் அனைத்து ட்ரோன்களும் ஒப்படைக்கப்படும்.

இந்தியாவில் தயாரிப்பு: இந்த ஒப்பந்தத்தின்படி, ட்ரோன்கள் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும். இதற்கு தேவையான சில உதிரி பாகங்களை, ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கும். மேலும் இந்த ட்ரோன்களை பராமரிப்பது, பழுதுபார்ப்பதற்காக இந்தியாவிலேயே ஒரு தொழிற்சாலையை ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவும். இங்கிருந்து ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் சேவை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE