ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும்: லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறைஆணையருக்கு, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவர் செல்ல.ராசாமணி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வாகனங்களை ஆய்வுக்காக போக்குவரத்துத் துறையினர் நிறுத்தாமலேயே, ஆய்வின்போது வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும், அதிக பாரத்தை இறக்கி வைக்க மறுத்ததாகவும் கூறி, ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லாமல் வழக்கு பதிவு செய்கின்றனர். இதற்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

பழுது காரணமாக பட்டறையில் இருந்த லாரிகள், வேறு மாநிலத்தில் இயங்கிய லாரிகளைக்கூட தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்றதாகக் கூறி, எந்த ஆதாரமும் இல்லாமல், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட லாரிக்கான தகுதிச் சான்றைப் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும்போதுதான், ஆன்லைனில் அபராதம் விதித்திருப்பது தெரியவருகிறது. இது முற்றிலும் லாரித் தொழிலை முடக்கும் செயலாகும். ஏற்கெனவே, சுங்கக் கட்டணம், டீசல், காப்பீடு கட்டணம் உயர்வு, ஓட்டுநர்கள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக மோட்டார் தொழில் அழிந்து வருகிறது.

ஸ்பாட் ஃபைன்...

எனவே, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். விதிகளை மீறும் வாகனங்களை சம்பந்தப்பட்ட இடத்தில் நிறுத்தி, ஸ்பாட் ஃபைன் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE