இந்தியாவில் ‘ஆப்பிள் பே’? - ஆப்பிள் நிறுவனத்தின் பலே திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய நாட்டின் சந்தை ஆப்பிள் நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

இரு தரப்புக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்திய பயனர்களுக்காக வேண்டி பிரத்யேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் வகையில் இதன் இயக்கம் இருக்கும் என தெரிகிறது. கடந்த ஏப்ரலில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மும்பை மற்றும் டெல்லியில் ‘ஆப்பிள் ஸ்டோர்’ நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செயலிகள் எப்படி செயல்படுகிறதோ அது போலவே இதன் இயக்கம் இருக்கும் என தெரிகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை அறிமுகமான நாள் முதல் பயனர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது. கடந்த மே மாதம் மட்டுமே சுமார் 9 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE