“பிசினஸில் நம்பர் 1 ஆகவேண்டும்”
“கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில் கேட்ஸையும், வாரன் பபெஃட்டையும் மிஞ்ச வேண்டும்”
இவைதாம் தொழில் முனைவராகும் அத்தனை பேரின் கனவுகள்.
“தீய சக்தியாக இருக்காதே (Don’t be evil)” என்று நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் ஒரு கம்பெனி வழிகாட்டும் கொள்கை வகுக்குமா? இந்த நேர்மைப் பதாகையோடு கார்ப்பரேட் உலகில் தொடர் வெற்றி காண முடியுமா? கம்பெனி நிறுவனர்கள் இருவரும் 35 வயதில் மில்லியனர்களாக முடியுமா?
“முடியும்”, “முடியும்”, “முடியும்.” ஆணித்தரமாகச் சொல்கிறது கூகுள் நிறுவனம்.
***
லாரி பிறக்கும்போதே கம்ப்யூட்டரோடுதான் பிறந்தான் என்று சொல்லலாம். அம்மா, அப்பா இருவரும், மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் பேராசிரியர்கள். வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தது. இதனால், தன் ஐந்தாம் வயதிலேயே கம்ப்யூட்டரை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டான். ஆரம்பப் பள்ளியிலேயே, ஹோம் ஒர்க் கணினியில்தான் போடுவான். ஆசிரியர்களிடம் பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுப்பான். அவர்களுக்கே கம்ப்யூட்டர் அத்தனை பரிச்சயமில்லாத காலம். பிரமித்துப் போனார்கள். அறிவியலில் அதிக ஈடுபாடு. வீட்டிலிருந்த கருவிகளை அக்கு அக்காகப் பிரித்துப் போடத் தொடங்கினான், இந்த விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கவைத்தது. ஆஸ்திரிய நாட்டு நிக்கோலா டெஸ்லா, பல முக்கிய எலெக்ட்ரிக்கல் கண்டுபிடிப்புகளின் தந்தை. ஆனால், இவற்றைக் காசாக்கும் பிசினஸ் உத்திகள் தெரியாத அப்பாவி. ஆகவே, வறுமையில் வாழ்ந்தார், மறைந்தார். தன் பன்னிரெண்டாம் வயதில், லாரி டெஸ்லாவின் வரலாற்றைப் படித்தான். எதைக் கண்டுபிடித்தாலும், அதை வணிகரீதியாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.
பள்ளிப் படிப்பை முடித்த லாரி, மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தான். இங்கே, லீடர்ஷேப் (Leadershape) என்னும் கோடைகாலப் பயிற்சி நடக்கும். இதில் பங்கேற்பவர்கள் கற்பனையாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, கற்பனைப் பொருட்களை உருவாக்கிச் சந்தைப்படுத்தவேண்டும். மாணவர்களை பிசினஸ் நிர்வாகத்துக்கு அறிமுகம் செய்வதோடு, அவர்கள் தலைமைப் பண்புகளையும் பட்டை தீட்டும் முகாம். லாரி ஆர்வத்தோடு கலந்துகொண்டான்.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கு பஸ்கள் பயன்படுத்தினார்கள். அதிக நேரம் விரயமானது. வளாகத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் தான் லாரியின் பிசினஸ் பிளான். ஆமாம், பிரம்மாண்டக் கனவுகள் காணத் தொடங்கிவிட்டான்.
1995. பொறியியலில் உயர்ந்த மதிப்பெண்கள். பிரபல ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எச்டி. படிப்புக்குச் சேர்ந்தான். புதிய மாணவர்களுக்குப் பல்கலைக் கழகத்தைப் பரிச்சயப்படுத்த, புதிய மாணவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு சீனியர் மாணவன் அவர்களுக்கு வளாகத்தைச் சுற்றிக் காண்பிப்பான். பாடம், பேராசிரியர்கள், தங்கும் வசதிகள் போன்ற எல்லாச் சந்தேகங்களுக்கும் தெளிவு தருவான்.
லாரியின் குழுவுக்கு வழிகாட்டியாக வந்தவன் செர்கி பிரின். ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவன். யூத இனத்தைச் சேர்ந்த குடும்பம், பல அரசுக் கட்டுப்பாடுகளையும், சமுதாயக் கொடுமைகளையும் சந்தித்தது. செர்கியின் ஆறாம் வயதில் பெற்றோர் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்பா மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், அம்மா நாசா விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானியாகவும் பணியில் சேர்ந்தார்கள்.
சிறுவயது முதலே செர்கிக்குக் கணக்குப் போடுவது அல்வா சாப்பிடுவது மாதிரி. அவன் ஒன்பதாவது வயதில் அப்பா ஹோம் கம்ப்யூட்டர் வாங்கித் தந்தார். இதற்குப் பிறகு, எப்போதும் கம்ப்யூட்டரோடுதான். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் கணிதம், கம்ப்யூட்டர் இரண்டையும் விசேஷ பாடங்களாக எடுத்தான். முன்வரிசையில் மதிப்பெண்கள். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டரில் முதுகலைப் பட்டம் வாங்கியபின் பி.எச்டி படிப்பில் சேர்ந்தான். லாரியோடு சந்திப்பு இப்போதுதான்.
லாரி, செர்கி இருவருக்கும் அறிவாளி என்னும் தன்முனைப்பு அதிகம். முதல் சந்திப்பிலேயே, இருவருக்கும் அடித்துக்கொள்ளாத குறையாக வாக்குவாதங்கள். ஆனால், இதையும் மீறி ஒருவருக்கொருவர் மீது மரியாதை. அடிக்கடி சந்தித்தார்கள். பழகப் பழக நட்பு வளர்ந்தது.
பி.எச்டி. படிப்புக்கான ஆராய்ச்சிக்கு எந்த விஷயத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று லாரி தேடல் தொடங்கினார். ஏட்டுச் சுரைக்காய் ஆராய்ச்சியும், டாக்டர் பட்டமும் மட்டுமே அவர் இலக்குகள் அல்லவே? ஆராய்ச்சியை பிசினஸாக்கிக் காசாக்க வேண்டுமே? ஸ்டான்ஃபோர்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. இந்த சமுத்திரத்தில் எதைத் தேடி எதை, எப்போது கண்டுபிடிப்போமோ? நொந்துபோனார்.
லாரியின் விரக்தியை அதிகமாக்கியது இன்டர்நெட். லட்சக்கணக்கானோர் தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். கொட்டும் தகவல்கள், சேதிகள் ஒரு பக்கம்; அறிவை வளர்க்கக் காத்திருக்கும் லட்சக் கணக்கானோர் மறு பக்கம். இருவரையும் இணைக்கத் தேவையான பாலம் இல்லை. அந்தப் பாலம், ``தகவல் தேடலை” சுலபமாக்கும் தொழில் நுட்பம். லாரி இதையே தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார்.
இதே சமயம், செர்கி, Data Mining (தகவல் தோண்டல்) என்னும் கணினித் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இதை எளிமையாக, கீழ்க்கண்டபடி விளக்கலாம். தகவல்களை ஒரு சுரங்கமாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் சுரங்கங்களில் தாதுப்பொருட்களாக இருக்கின்றன. இவை உலோகமும், மண், கழிவு ஆகியன அடங்கியவை. மண், கழிவு ஆகியவற்றை நீக்கினால், உலோகம் கிடைக்கும். இதேபோல், கம்ப்யூட்டர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் எக்கச்சக்க விவரங்களிலிருந்து, வேண்டாதன நீக்கினால், உபயோகமான தங்கமான தகவல்கள் கிடைக்கும்.
லாரி, செர்கி ஆகிய இருவரின் ஆராய்ச்சியும் இணையத் தகவல்கள் தேடலும், சேகரிப்பும். ஆகவே, முயற்சிகளை இணைத்துக்கொண்டார்கள். அப்போது, இணையத்தில் தகவல்கள் தேடுவதற்குப் பல ``தேடுபொறிகள்” (Search Engines) இருந்தன. இவை எவையும், வேகமாக, புத்திசாலித்தனமாகச் செயல்படவில்லை. தங்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்திய சூத்திரங்களால், சிறந்த தேடுபொறியை உருவாக்க முடியும் என்று லாரி- செர்கி உணர்ந்தார்கள். இந்தத் திட்டத்தின் அடுத்த அம்சமாக, இணையத்தில் இருந்த மொத்தப் பக்கங்களையும் பதிவிறக்கம் செய்தார்கள். இடுப்பொடியும் வேலை! தங்கள் கண்டுபிடிப்புக்கு இருவரும் வைத்த பெயர் Backrub. பழைய (Back) தகவல்களைத் தேடுவதால் இந்தப் பெயர்.
1997. Backrub என்னும் பெயர் இருவருக்கும் பிடிக்கவில்லை. பெயர் எல்லோரையும் ஈர்க்கவேண்டும், உலகெங்கும் உச்சரிக்கச் சுலபமாக இருக்கவேண்டும். நண்பர்களோடு விவாதித்தார்கள். ஷான் ஆன்டெர்சன் என்னும் நண்பர் கூகோள்ப்ளெக்ஸ்* (Googolplex) என்னும் பெயரைச் சிபாரிசு செய்தார். இது நீளமாக இருப்பதாகச் சொல்லி, லாரி, கூகோள் (Googol) என்று மாற்றினார்.
அடுத்த சில நிமிடங்கள். புதிய தேடுபொறியின் பெயர் கூகோள் அல்ல, கூகுள் என்று ஆனது. காரணம்? ஒரு தவறு. கூகோள் என்னும் பெயருக்கு வேறு யாராவது காப்புரிமை பெற்றிருக்கிறார்களா என்று ஷான் ஆன்டெர்சன் இணையத்தில் தேடினார். அவசரமோ, பதற்றமோ, எழுத்துப் பிழையோ என்ன காரணம் என்று தெரியவில்லை. தேடுபொறியின் பெயரை Google என்று ஷான் பதிவு செய்துவிட்டார். தவறில் தொடங்கிய முயற்சி முழுக்க முழுக்கச் சாதனைச் சரித்திரமானது எப்படி?
அடுத்த வாரம்......
எட்வர்ட் கேஸ்னர் (1878 - 1955) அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியர். 1 போட்டு நூறு பூஜ்யங்கள் போட்டார். அந்த எண்ணுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தார். தன் மருமகன்கள் எட்வின், மில்டன் என்னும் இரு பொடியன்களுடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தபோது, விளையாட்டாக அவர்களிடம் இந்தக் கேள்வியை வீசினார். மில்டன் உடனே சொன்னான், “கூகோள்.” அர்த்தமில்லாத, மழலை வார்த்தை. பேராசிரியருக்குப் பிடித்துவிட்டது. இந்தப் பெயரையே வைத்துவிட்டார். கூகோள் பக்கத்தில் இன்னும் நூறு பூஜ்யங்கள் வரும் எண்ணுக்கு ”கூகோள்ப்ளெக்ஸ்” என்று பெயர் சூட்டினார். இதற்குப் பிறகு, கூகோள், கூகோள்ப்ளெக்ஸ் ஆகிய இரண்டு வார்த்தைகளும், பிரம்மாண்ட எண்களுக்கான குறியீடுகள் போல் ஆகிவிட்டன. இதனால்தான், கணக்கில்லாத இணையதளங்களைத் தேடும் கருவி என்னும் அர்த்தத்தில் ஷான் புதிய தேடுபொறிக்குக் கூகோள்ப்ளெக்ஸ் என்னும் பெயரைப் பரிந்துரைத்தார்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago