இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்ய விரும்புகிறோம்: டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்ய விரும்புவதாக டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க், "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைப் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய அவர் தூண்டுகிறார். இது நாங்கள் செய்ய உத்தேசித்துள்ள ஒன்று" என தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான எலான் மஸ்க்கின் சந்திப்பு குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் வின்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய முன்வருமாறு எலான் மஸ்க்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூடிய விரைவில் நாங்கள் அதனை செய்வோம்" எனத் தெரிவித்தார். மேலும், தான் மோடியின் ரசிகர் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு இந்தியா வர தான் விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "எலான் மஸ்க் உடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பலதரப்பட்ட விஷயங்களை நாங்கள் விவாதித்தோம்" என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தனது குழுவை கடந்த மாதம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. கார் உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான வாய்ப்புகள் குறித்து அப்போது அக்குழு ஆய்வு செய்தது.

இதையடுத்து, "புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கான இடத்தை டெஸ்லா தேர்ந்தெடுக்க உள்ளது. புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கு இந்தியா ஒரு அருமையான இடம்" என தெரிவித்திருந்தார். அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதால், பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடனான தங்கள் வர்த்தக தொடர்பை குறைத்துக்கொள்ள விரும்புகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE