கரிசல் மண்ணில் புது முயற்சி - கோவில்பட்டியில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் தீவிரம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்கா முழுவதும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. மேலும், கிணற்று பாசனம், ஊருணி பாசனமும் ஆங்காங்கே உள்ளது. இந்த பிர்காவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மிளகாய், உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். காலப்போக்கில் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக விட்டு, வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு பட்டுப்புழு வளர்க்க முடிவெடுத்து அதற்குரிய பணிகளைச் செய்தார். முதற்கட்டமாக தனக்குரிய நிலத்தில் மல்பெரி செடிகளை பயிரிட்டார். தொடர்ந்து பட்டுப்புழுக்கள் வளர்ப்புக்கு ஏற்றவாறு பண்ணை அமைத்தார். பின்னர் பட்டுப்புழுக்களை வாங்கி வளர்ப்பு பணியில் ஈடுபட்டார்.

இது லாபகரமாக நடைபெறவே, புளியங்குளம் கிராமத்தில் மட்டும் சுமார் 20 பட்டுப்புழு பண்ணைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.

இது குறித்து தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ரெங்கநாயகலு கூறியதாவது: இங்குள்ள விவசாயிகள் மானாவாரி பயிர்கள் சாகுபடி பொய்த்து போனதால், அதற்கு மாற்றாக பட்டுப்புழு வளர்ப்பை தேர்வு செய்தனர். முதற்கட்டமாக மல்பெரி செடிகளை தங்களது நிலங்களில் பயிரிட்டனர். இந்த செடிகளை பொறுத்தவரை நடவு செய்த நாளில் இருந்து 6 மாதத்திலேயே அறுவடைக்கு தயாராகிவிடும்.

பட்டுப்புழுக்களின் உணவான மல்பெரி செடிகளின் உற்பத்தி ஆண்டு முழுவதும் இருக்கும். ஒரு பண்ணைக்கு 3 ஏக்கரில் மல்பெரி செடிகள் நடவு செய்திருக்க வேண்டும். ஒரு செடி 20 ஆண்டுகள் வரை பயன்தரும். பட்டுப்புழுக்களை கோவை, தருமபுரி, தேனி மாவட்டங்களில் இருந்து வாங்கி வருகின்றனர்.

பகல் நேரத்தில் எடுத்து வந்தால் புழுக்கள் வெப்பத்தால் பாதிக்கப்படும் என்பதால், இரவு நேரங்களில் தான் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த புழுக்கள் 26 நாட்களில் வளர்ந்து, கூடு கட்டுகிறது. கூடுகளை சேகரித்து கிலோ ஒன்றுக்கு தரத்தை பொறுத்தும், தேவையை பொறுத்தும் ரூ.400-ல் இருந்து ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பண்ணைக்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.50,000 வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், வருமானம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கிறது. தற்போது புளியங்குளம் கிராமத்தில் 20 பட்டுப்புழு வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இதற்காக 200 ஏக்கரில் மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அரசு உதவி செய்தால் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE