அசாதாரண மனிதர்கள்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

சுபாஷினி மிஸ்த்ரி பதினான்கு குழந்தைகள் கொண்ட வறுமைக் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் திருமணம். கணவருக்கு கூலி வேலை. 20 வயதில் 4 குழந்தைகளின் தாயாகிறார். திடீரென கணவர் நோய்வாய்ப்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்து போகிறார்.

இரண்டு வேளை உணவாவது கிடைத்துக் கொண்டிருந்த குடும்பம் இப்பொழுது நடுத்தெருவில் நிற்கிறது. சவமாகக் கிடந்த கணவர் காலடியில் சபதமெடுக்கிறார் சுபாஷினி. ஏழைகளை முறையாக மதித்து சரியான சிகிச்சை தரும் மருத்துவமனை கட்டுவதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று. மாற்றிக் கட்டும் துணிக்கே பிரச்சினை உள்ள சூழ்நிலையில், மருத்துவமனை கட்டுவது என்பதெல்லாம் அவ்வளவு சுலபமா என்ன?

கட்டடக் கூலியாக புது வாழ்க்கையைத் துவங்குகிறார். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சேமிக்கிறார். சேமித்த தொகையில் ஒரு காய்கறிக் கடை போடுகிறார். மாதம் 500 ரூபாய் மிச்சம் பிடிக்கும் அளவு வளர்கிறார்

நான்கு பிள்ளைகளில் ஒருவரையாவது டாக்டர் ஆக்க வேண்டும். சுட்டிப்பையன் அஜயை தேர்ந்தெடுத்து அவன் கல்விக்கு மட்டும் செலவிடுகிறார். 1992ல் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் வாங்கி ஒற்றை அறை மருத்துவமனை அமைக்கிறார். தன் பகுதியில் உள்ள எல்லா மருத்துவர்களையும் அழைத்துப் பேசி தன் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க வைக்கிறார். 1993ல் துவக்கப்பட்ட Humanity Hospital-லில் முதல் நாளே 250 பேர் இலவச சிகிச்சை பெறுகிறார்கள்.

1994ல் மகன் அஜய் மிஸ்த்ரி மருத்துவப் பட்டம் பெற்று தாயின் கனவைத் தொடர்கிறார். பிறகு இவர்கள் பணியை வியந்து உள்ளூர் எம்.பி. அரசு நிதியும், உள்ளூர் மக்கள் நன்கொடைகளும் வழங்குகிறார்கள். ஒரு கனவு நிஜம் பெறுகிறது.

2008ல் நிஜ நாயகர் விருது பெற்றபின் கிடைத்த நிதியுதவியில் சிறப்புப் பிரிவுகள் துவக்கப்பட்டு இன்றும் தினசரி 400 பேருக்கு மேல் 10 ரூபாயில் சிகிச்சை பெறுகிறார்கள்.

சி.என்.என்- ஐ.பி.என் நெட்வொர்க் ரிலையன்ஸ் நிறுவன உதவியுடன் 48 நிஜ நாயகர்களை சலித்து தேர்ந்தெடுத்து விருதும் நிதியுதவியும் வழங்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் சூழலில் பேட்டி கண்டு தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பியது சி.என்.என்- ஐ.பி.என். அவர்கள் கதைகளை அச்சுப் படுத்தியிருக்கிறார்கள் Real Heroes – Ordinary People Extraordinary Service என்ற எளிய புத்தகத்தில்.

அந்த ஒரு பானை சோற்றில் மேலே இருப்பது ஒரு பருக்கைச் சோறு.

இந்த 48 பேரும் வெவ்வேறு களத்தில் பணி புரிபவர்கள். எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள். பெரிய ஊடக வெளிச்சம் இல்லாதவர்கள். சமூக மேம்பாடு, பெண் கல்வி, விளையாட்டுத்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு என நலிவுற்ற பிரிவினருக்கு பணிபுரிபவர்கள் என்பது தான் இவர்களை இணைக்கும் சங்கிலி.

மதுரையில் மன நலம் குன்றியவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி பசியாற்றும் கிருஷ்ணன் கதையில் ஆரம்பிக்கிறது புத்தகம். இன்றும் தினம் 400 பேருக்கு சோறிடும் தாயுமானவர் நம் கிருஷ்ணன்.

சிறை சென்றோர் குழந்தைகளை காப்பிடம் அமைத்து உதவுகிறார் ரெனி ஜார்ஜ். கல்வி, தொழிற் பயிற்சி, ஆலோசனை என அளித்து அவர்களை வழி நடத்துகிறார்கள் ஜார்ஜ் தம்பதியினர். இன்று 156 பிள்ளைகளை பராமரிக்கிறது அவர்கள் காப்பகம்

பாலின வன்முறைக்கு ஆளான குழந்தைகளை காப்பாற்றி, ஹெச். ஐ. வி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் கல்வி, விபச்சாரத்தை ஒழிக்க தொடர்ந்து போராட்டம் என பணியாற்றுகிறார் சுனிதா கிருஷ்ணன். தற்சமயம் பாதிக்கப்பட்ட 17 குழந்தைகளுக்காக சிறு பள்ளிகூடத்தை நடத்துகிறார். சிறு வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இவர், அது பிறர் வாழ்வில் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அசாதாரணமானவை.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பக்வான் நாகர்கோஜே கிராமப்புறத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மாரத்தான் ஓடப் பயிற்சி அளிப்பது. அதிகாலை ஐந்து மணிக்கு இவர் வெறுங்காலுடன் ஓடத்தயாராக நிற்கும் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிப்பதை படிக்கும் போது சிலிர்க்கிறது.

காஷ்மீர் லடாக்கில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்றதும் செயற்கை பனிப்பாறைகள் உருவாக்கி அந்த பகுதியின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்தவர் செவாங்க் நோர்பெல். நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கையை காப்பாற்றிய செவாங்க்தான் அப்பகுதி மக்களின் காவல் தெய்வம்!

அபய் ஆனந்த் மற்றும் ஆனந்த குமார் என இருவர் கிராமப்புற வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி (ஐ.ஐ.டி நுழைவு தேர்விற்கு) அளிக்கிறார்கள். இவர்கள் மாணவர்களில் 95% வெற்றி என்றவுடன் டைம் பத்திரிகை இவர்களைப் பற்றி செய்தி வெளியிட்டது. பராக் ஒபாமாவை பாராட்ட வைத்தது.

சோனம் வாங்க்சுக் தான் த்ரீ இடியட்ஸ் அமீர்கான் கதாபாத்திரத்தின் அசல் வடிவம். லடாக்கில் இவர் செய்த கல்விப் புரட்சி தான் கடைசியில் படத்தில் அமீர்கான் செய்பவை.

இப்படி மூன்று பக்கத்தில் ஒரு தனி மனிதனின் அசாதாரணப் பணி என 160 பக்கங்களில் 48 நிஜ நாயகர்கள் வரலாறு படிக்க வேண்டியவை மட்டுமல்ல. நம் மாணவர்களுக்கு புகட்ட வேண்டியவை

இதை நான் பரிந்துரைக்க இரண்டு காரணங்கள்.

முதலாவதாக, பிள்ளைகளை, பணியாளர்களை எப்படி ஊக்கப்படுத்துவது என்று அறியாமல் தவிப்போர் இதை அவசியம் படிக்க வேண்டும். எந்த அறிவுரையும் கூறாமல் பிள்ளைகளிடம் படிக்கக் கொடுங்கள்.

இரண்டாவது, நிறுவனங்களுக்கு இப்போது சி.எஸ்.ஆர் முதலீடுகள் தவிர்க்க முடியாதவை. அதனால் அதற்கு ஒரு துறை ஏற்படுத்தி செலவுகள் செய்யாமல் உங்கள் பகுதியில் உள்ள நிஜ நாயகர்களுக்கு நிதி உதவ செய்யலாம். என்னவெல்லாம் செய்யலாம் என்று அறிய இந்த புத்தகம் படிக்கலாம்.

லோட்டஸ் கலெக்சன் புது டெல்லியிலிருந்து வெளியிட்டுள்ள இந்த புத்தகம் வெறும் 195 ரூபாய் தான்.

பொழுது போக்கிற்கு நம் மக்கள் செலவிடும் நேரத்திலும் பணத்திலும் ஒரு விழுக்காடு இது போன்ற மக்கள் தொண்டுக்குச் செலவிட்டாலே புதியதோர் உலகம் செய்யலாம்!

டாக்டர். ஆர்.கார்த்திகேயன்-gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்