தொழில் முன்னோடிகள்: நாளை நமதே!

By எஸ்.எல்.வி மூர்த்தி

2016

மே மாத இறுதியில் நாம் தொடங்கிப் பயணம். கடைசி மைல் கல்லுக்கு வந்துவிட்டோம். பெஞ்சமின் பிராங்ளினில் (1706 – 1790) தொடங்கி, இன்றைய லாரி பேஜ், செர்கி பிரின் (கூகுள்) வரை நான்கு நூற்றாண்டுகள், 54 அற்புத மனிதர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு தனி மனிதர்களின் சாதனைச் சரித்திரம் மட்டுமல்ல, உலகத் தொழில் சகாப்தங்களின் ரத்தினச் சுருக்கம். 1763 – இல் ஜேம்ஸ் வாட் உருவாக்கிய நீராவி இன்ஜின் முதல் இன்றைய கூகுள் சர்ச் இன்ஜின் வரை எத்தனை வேகத் தொழில்நுட்ப மாற்றங்கள்….மனித வாழ்க்கையையே மாயாஜாலமாக்கிவிட்ட முன்னேற்றங்கள்…..

அறிவுத்தேடல்

உங்கள் வீட்டுப் பொடியன், “அர்ஜென்டீனாவின் தலைநகரம் எது?” என்று கேட்கிறான், நீங்கள் பதில் தெரியாமல் விழிக்கவேண்டியதில்லை: கம்ப்யூட்டரை ஆன் செய்து, கூகுள் இணையதளத்துக்குப் போய்த் தேட வேண்டியதில்லை. கூகுள் ஹோம் கருவி வாங்குங்கள். அதனிடம், “ஓக்கே கூகுள், அர்ஜென்டீனாவின் தலைநகரம் எது?” என்று அந்தச் சிறுவனையே கேட்கச் சொல்லுங்கள். “பியூனஸ் அயர்ஸ்” என்று கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் வரும். வருங்காலத் தலைமுறையின் அறிவுத்தேடல் எத்தனை எளிமையாகிவிட்டது?

உறவு / நட்புத் தொடர்புகள்

1980 – களில் தொலைபேசித் தொடர்புக்காக வருடக் கணக்காகக் காத்திருக்க வேண்டும். இன்று செல்போன் இல்லாத ஆளே இல்லை. இது மட்டுமா? ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், லிங்ட்இன் இன் போன்ற சமூக வலைதளங்களும் நட்பு வட்டத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு விரிவாக்கிவிட்டன; செய்திப் பரிமாற்றத்தை மிகவும் எளிதாக்கிவிட்டன.

ஷாப்பிங்

மொபைல் வாங்கவேண்டுமா? கடை கடையாய்த் தேடி அலையவேண்டியதில்லை. அமேசான். பிளிப்கார்ட், யுனிவெர்சல், இண்டியா பிளாஸா என பல இணையதளங்கள். பொருட்கள் வரிசை, விலை என ஒவ்வொருவருக்குள்ளும் போட்டா போட்டி. மொபைலை வீட்டுக்குக் கொண்டுவந்து தரும் சேவை. செல்போன் மட்டுமில்லை, கத்தரிக்காய் முதல் கார் வரை அத்தனை பொருள்களும் ஒரு கிளிக் தூரத்தில். வசதியான ஷாப்பிங் மலிவான விலையில்.

மீடியா

நாளிதழ்களும், பத்திரிகைகளும், சொடுக்கும் இணையதளங்களில். அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியோர் சினிமாக்களை ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். சில தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவர்களுக்காகவே படம் தயாரிக்கப் போகிறார்கள். வருங்காலத்தில், தியேட்டர் போகவேண்டாம், கியூவில் நிற்கவேண்டாம். வீட்டு ஹோம் தியேட்டரில் இளைய தளபதி, தல, சூர்யாவை சந்திக்கலாம்.

பணப் பரிவர்த்தனை

வீட்டு வரி, மின்சார பில் கட்டவேண்டுமா? கியூவில் நிற்கவேண்டாம், வீட்டிலிருந்தே கட்டலாம். யாருக்காவது பணம் தர வேண்டுமா? நோ செக், நோ மணி ஆர்டர். மொபைலில் டிஜிட்டல் பேமண்ட்.

நம் இன்றைய, இத்தகைய வசதிகளுக்குக் காரணம், நாம் சந்தித்த 54 சாதனையாளர்கள் தொடங்கிவைத்த ராஜபாட்டைதான்.

எத்தனை வகையான துறைகள்?

துறை

முன்னோடிகள்எண்ணிக்கை

கனரகத் தொழில்கள்

15

கம்ப்யூட்டர், இன்டர்நெட்

12

வீட்டு உபகரணங்கள்

8

உணவுகள்

7

மீடியா, பொழுதுபோக்கு, விளையாட்டு

6

மார்க்கெட்டிங்

2

கட்டுமானம், ஹோட்டல்

2

வங்கி, நிதி நிர்வாகம்

1

விமானப் போக்குவரத்து

1

மொத்தம்

54

பல்வேறு துறைச் சாதனை விருட்சங்களை இவர்கள் தண்ணீர் விட்டா வளர்த்தார்கள்? இல்லை, இல்லை. கண்ணீரால் காத்தார்கள். இவர்கள் சிந்தாத வியர்வை இல்லை, நீந்தாத நெருப்பாறுகள் இல்லை.

நாம் ஏன் இத்தகைய சாதனையாளர்களாகவில்லை? நாம் சாதாரணமாக அவிழ்த்துவிடும் சாக்குப் போக்குகள்:

என் குடும்பத்தில் களங்கம் இருக்கிறது. சமுதாயத்தில் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். நான் எப்படி முன்னேறமுடியும்?

ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்), ஜெஃப் பீஸோஸ் (அமேசான் நிறுவனர்), லாரி எலிசன் (ஆரக்கிள் கம்பெனி தொடங்கியவர்) ஆகிய மூவரும் அப்பா யாரென்று தெரியாமல் வளர்ந்தவர்கள்; மீடியா அரசி ஓப்ரா வின்ஃப்ரே கல்யாணமாகாமலே கருவுற்ற தாயின் மகள். சிறு வயதிலேயே பாலியல் பலாத்காரத்தைச் சந்தித்தவர். ஜான் ராக்பெல்லரின் (பெட்ரோலியம் உலக சூப்பர் ஸ்டார்) அப்பா மது, மாது என்னும் அத்தனை ஒழுக்கக்கேடுகளின் மறு உருவம்; மில்டன் ஸ்நேவ்லி ஹெர்ஷியின் (சாக்லெட் தயாரிப்புச் சக்கரவர்த்தி) அப்பா பொறுப்பே இல்லாத உதவாக்கரை மனிதர். இவர்களை விடவா உங்கள் சிலுவை சுமையானது?

நான் தாழ்ந்த சாதி. படிப்பு முதல் தொழில் வாய்ப்புகள் வரை, எல்லாக் கதவுகளும் எனக்கு மூடப்பட்டிருக்கின்றன.

ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் (நிதியுலக மேதை) யூத இனத்தவர். ஜெர்மனியில் பிறந்தவர். அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் ஜெர்மனியில் தீண்டத்தகாதவர்கள். முக்கிய வீதிகளில் நுழையக்கூடாது. உயர் சாதியினரைக் கண்டால் தொப்பியை உயர்த்தி மரியாதை செலுத்தவேண்டும். ஹங்கேரியில் பிறந்த யூதரான ஆன்ட்ரூ குரோவ் (இண்டெல் சிப் கம்பெனி சி.இ.ஓ.) குடும்பம் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்யாவால் பல கொடுமைகளைச் சந்தித்தது. 24 வயதில் சொந்தங்கள் அனைவரையும் விட்டு அமெரிக்காவுக்கு அகதியாக ஓடி வந்தார். செர்கி பிரின் அம்மா, அப்பாவும் யூதர்களுக்கு எதிரான இன கொடுமைகளை அனுபவித்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தவர்கள்.

நான் ஏழை

நம் 54 முன்னோடிகளில் 17 பேர் அடுத்த வேளைச் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்பதே தெரியாத வறுமைத்தீயில் வாடி வளர்ந்தவர்கள். ``கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் கொடுமை” என்று பாடினார் ஒளவைப் பாட்டி. அவர் பாட்டைப் பொய்யாக்கி, இளமையில் வறுமை சாபமல்ல, மாபெரும் வரம், முன்னேற வைக்கும் உந்துசக்தி என்று நிரூபிக்கிறார்கள்.

நான் அதிகம் படிக்காதவன்

பெஞ்சமின் பிராங்ளின், மாத்யூ போல்டன் (நீராவி இயந்திரம் தயாரிப்பாளர்), ஜோஸையா வெட்ஜ்வுட் (பீங்கான் பொருட்கள் கலைஞர்), மான்ட்கோமரி வார்ட் (மெயில் ஆர்டர் பிசினஸ்), ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (கேமரா), மில்டன் ஸ்நேவ்லி ஹெர்ஷி, கோனோசுக் மாட்ஸூஹீட்டா (ஜப்பானிய பானோசோனிக் கம்பெனி) ஆகியோர் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்.

எனக்கு வயதாகிவிட்டது

ஹார்லன்ட் ஸான்டர்ஸ் கே.எஃப்.சி. தொடங்கி ஜெயித்தது அவர் 62 – ஆம் வயதில். அதுவரை அவர் பார்த்த வேலைகள் – வீடுகளுக்குப் பெயின்ட் அடிப்பவர், நீராவி இன்ஜினில் கரி அள்ளிப் போடுபவர், போட் ஓட்டுபவர், பஸ் கண்டக்டர், இன்ஷூரன்ஸ் சேல்ஸ்மேன், பெட்ரோல் பங்க் உதவியாளர். ரே க்ராக் (மக்டொனால்ட்ஸ் நிறுவனர்) உணவு விடுதிகள் தொடங்கியது தன் 52 – ஆம் வயதில். கிங் காம்ப் ஜில்லெட் (ஷேவிங் ரேசர்கள்) தொழில் முனைவரானது தனது 48 – ஆம் வயதில்; வில் கெல்லாக் தன் வாழ்க்கையில் 46 வயது வரை சந்தித்தவை தோல்விகள்.

எனக்கு உடல்நலம் சரியில்லை

ஆல்ஃபிரெட் நோபல் சின்ன வயது முதலே சீக்காளி. பள்ளிப் படிப்பை ஒன்பது வயதிலேயே விட வேண்டிய அளவுக்கு உடல்நலக் கோளாறுகள். தாமஸ் ஆல்வா எடிசன் ஆன்ட்ரூ குரோவ் இருவரும் இளம் வயதிலேயே காது கேட்கும் சக்தியை இழந்தவர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸுக்கு 2003 – ஆம் ஆண்டு கணையத்திலும், கல்லீரலிலும் புற்றுநோய் வந்தது. மரணம் தன் கதவைத் தினமும் தட்டிக்கொண்டேயிருந்தபோதும், 2011 வரை அயராமல் உழைத்தார்.

சொந்தங்கள், நண்பர்கள், பங்காளிகள், சக ஊழியர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள்

வில் கெல்லாக் (கெல்லாக் காலை உணவுகள்) தன் அண்ணனால் முதுகில் குத்தப்பட்டவர். வர்கீஸ் குரியன் (அமுல்) தன் கீழ் பணி புரிந்த மேனேஜர், அரசியல்வாதிகள் ஆகியோரால் ஏமாற்றப்பட்டவர். வால்ட் டிஸ்னியை அவர் நண்பரே நடுத்தெருவில் நிறுத்தினார்; டெட் டேர்னர் (சி.என்.என். சேனல்) , ஸ்டீவ் ஜாப்ஸ், தாங்கள் தொடங்கிச் செங்கல் செங்கலாகக் கட்டிய சொந்த நிறுவனங்களிலிருந்தே துரத்தப்பட்டார்கள். ஃபில் நைட் (நைக்கீ ஷூக்கள்) தொழில் சகாக்களால் கால் வாரப்பட்டார். தாமஸ் வாட்சன் (ஐ.பி.எம்.) தில்லாலங்கடி முதலாளிகளால் ஏமாற்றப்பட்டுச் சிறைக்கே அனுப்பப்பட்டார்.

இவற்றோடு ஒப்பிட்டால் உங்கள் பிரச்சினைகள் அத்தனையும் வெறும் ஜூஜூபி. சிக்கல்கள் வரும்போது இந்த வாழ்க்கை வரலாறுகளை மறுபடி, மறுபடி நினைத்துப்பாருங்கள். உங்கள் சிந்தனையில் புது ரத்தம் பாயும். ஜெயிக்கும் வெறி கொழுந்துவிட்டு எரியும். வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்.

......

எனக்கு ஒரு அடங்காத ஆசை. இந்தத் தொடரின் அடுத்த பகுதியை நான் விரைவிலேயே தொடங்கவேண்டிய கட்டாயம் வரவேண்டும். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் முன்னோடிகளாக அணிவகுத்து நிற்கவேண்டும். அவர்களுள் ஏராளமானோர் இந்தியர்களாக, தமிழர்களாக இருக்கவேண்டும். இந்தக் கனவு பலிப்பது நம் எல்லோர் கைகளிலும் இருக்கிறது. நடத்திக் காட்டுவோம்.

(தொடர் நிறைவு பெறுகிறது)

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்