`மி
க்ஸி ரிப்பேருக்கு தந்திருக்கேன், வரும்போது வாங்கிட்டு வாங்க’ என்கிறாள் மனைவி. திரும்புகையில் வீடு ஞாபகம் இருக்கிறது. ஓரளவு மனைவியும் ஞாபகம் இருக்கிறது. மிக்ஸி மறந்துவிடுகிறது. வெறுங்கையோடு வீடு வரும் உங்களைப் பார்க்கிறாள் தர்மபத்தினி. `போச்சுடா, கல்யாணம் ஆனதிலிருந்து மறந்த விஷயங்கள் அனைத்தையும் வாய்ஸ் மாடுலேஷனுடன் ஒரு பாடு புலம்ப போகிறாள்’ என்று நீங்கள் நினைக்கும் போது ‘என்ன மறந்துட்டீங்களா, பரவாயில்லை விடுங்க, போன மாசம் ஆபிசிலேருந்து வரும் போது டெய்லர்டேருந்து என் லேவண்டர் ப்ளவுஸ ஞாபகமா வாங்கிட்டு வந்தீங்களே, நல்லா ஞாபகம் இருக்கு’ என்று மனைவி கூறினால் மாரடைப்பு வருமா வராதா?
பலருக்கு இப்படி ஒரு மனைவி கிட்டுவதில்லை. நாமும் கூட இப்படி வாழ்வதில்லை. வாழ்க்கையும் வியாபாரமும் இப்படி அமைவதில்லை.
`அது சரியில்லை, இது சரியில்லை என்று குறைகளை தேடிப் பிடித்து புலம்புகிறோம். ஆனால், இது சரியாயிருக்கு, அது சரியாயிருக்கு’ என்று என்றைக்காவது நிறைகளைக் கவனிக்கிறோமா? குறைகளை மட்டுமே தோண்டித் துருவி தேடிக் கண்டுபிடிப்பது டாக்டர்கள் வேலை. மற்றவர்களுக்கு இது பொருந்தாது. பொருந்தக்கூடாது. ஆனால் இப்படித்தான் வாழ்கிறோம். இப்படித்தான் வியாபாரமும் செய்கிறோம்.
வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் நாம் செய்யும் செயல்களுக்கு ரிப்போர்ட் கார்ட் தயாரித்து அலசினால் பல விஷயங்களில் நாம் தவறு செய்து ஃபெயில் ஆவது புரியும். அதை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக சரி செய்யத் தொடங்கினால் ஏழு ஜென்மம் பத்தாது!
பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் போதும் சவாலான நேரங்களிலும் முடிவு பக்கவாதம் நம்மைப் பீடித்து பாடாய் படுத்தும். அது போன்ற சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மாற்றங்களைப் படைக்கவும் தேவை தெளிவான பார்வை, சரியான அணுகுமுறை. எங்கு செல்வது, என்ன செய்வது, எப்படி செய்வது என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பெற நமக்குத் தேவை `பிரகாசமான பகுதி’ (Bright Spot) என்கிறார்கள் உளவியலாளர்கள். குறைகளை நிவர்த்தி செய்ய அதை அவற்றை ஒதுக்கி வைத்து நிறைகளை தேடிப் பிடியுங்கள், அதில்தான் சூட்சுமம் இருக்கிறது என்கிறார்கள்.
எதைச் சொன்னாலும் மறக்கும் கணவனை, அவன் மணைவி சதா கழுவி ஊற்றினால் `எதை எதையோ மறந்து வைத்துவிட்டு தொலைக்கிறோம், இவளை எங்கேயாவது தொலைக்க முடிந்தால் தேவலை’ என்று கணவனுக்கு வெறுப்புதான் வரும். கோபம்தான் அதிகரிக்கும். அப்படி இல்லாமல் கணவனிடம் மனைவி அவன் ஞாபகமாய் வாங்கி வந்த விஷயங்களை நினைவு கூர்ந்து ‘அது போல் ஞாபகமா வாங்கி வர உங்களுக்கு முடியும், அடுத்த தரம் மறக்காதீங்க’ என்று கூறினால் கணவனுக்கு அவன் செய்த தப்பு உறைத்து அடுத்த முறை மறக்காமல் இருக்க முயற்சி செய்வான். கணவன் ஞாபகமாய் வாங்கி வந்த லேவண்டர் ப்ளவுஸ் ஒரு ப்ரைட் ஸ்பாட்!
வாழ்க்கையாகட்டும் வியாபாரமாகட்டும், மாற்றம் கொண்டு வர முயலும் தருணங்களில் நீங்கள் தேடவேண்டியது ப்ரைட் ஸ்பாட்டுகளை. ஒரு படத்தில் நாகேஷ் ஒரு பெரிய வெள்ளை தாளில் கருப்பு புள்ளி ஒன்றை வரைந்து ‘இது என்ன’ என்று கேட்பார்? அனைவரும் கருப்பு புள்ளி என்று பதிலளிப்பார்கள். உடனே நாகேஷ் ‘இத்தனை பெரிய வெள்ளை பேப்பர் இருக்க, ஒரு சின்ன கருப்பு புள்ளி மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்ததா’ என்று அழகாய் கேட்பார்!
செய்யும் செயல்களில் ப்ரைட் ஸ்பாட்டுகள் தென்பட்டால் அச்செயல் ஓரளவேணும் சரியாய் தான் நடக்கிறது என்று அர்த்தம். தவறுகள் இருந்தாலும் தவறில்லாத ப்ரைட் ஸ்பாட்டுகள் அங்கிருக்கிறதே. அப்படியென்றால் அச்செயலை சரியாய் செய்யும் வழியும், முறையும், திறமையும் இருக்கிறது என்று தானே பொருள். செய்யும் செயலில் இருக்கும் ப்ரைட் ஸ்பாட்டை அதிகரித்தால் அச்செயல் முழுவதுமே சரியாய் செய்யலாமே. அப்படி அந்த ப்ரைட் ஸ்பாட்டுகளை கண்டுபிடித்து அதை ஒரு ஊன்றுகோலாக வைத்து தவறுகளை திருத்திக்கொள்ளவும் தப்புகளை சரி செய்துகொள்ளவும் கற்றுத் தர முடியுமே. ப்ரைட் ஸ்பாட்டுகள் தெளிவான பாதையை மட்டும் காண்பிக்காமல் அதை சரியாய் செய்யத் தேவையான உந்துதலையும் ஊக்கத்தையும் தரும் சக்தி கொண்டது.
பள்ளிச் செல்லும் உங்கள் குழந்தையின் ரிப்போர்ட் கார்டை பார்க்கிறீர்கள். ஒரு சப்ஜெக்ட்டை தவிர மற்ற அனைத்திலும் நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தால் உங்கள் கண் முதலில் எங்கு செல்லும்? வேறெங்கு, அந்த ஃபெயிலான சப்ஜெக்டிற்குத் தான். `எப்படி இந்த சப்ஜெக்ட்டில் மார்க் கம்மியாச்சு? ஒழுங்காய் படிச்சா தானே. எப்பப்பாரு அந்த பாழாய் போன ஃபேஸ்புக்ல தான் இருக்கே. நாளையிலிருந்து முதல் காரியமாய் ட்யூஷனுக்கு போ, இல்லை மாடு மேய்க்கத் தான் நீ லாயக்கு’ என்று அலறினால் என்ன ஆகும்? உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை குறையும். அடுத்த பரிட்சையில் எல்லா சப்ஜெக்டுகளுக்கும் ட்யூஷன் வைக்கும் நிலைமை உருவாகும்!
செயல்கள் புரிவதில், மாற்றங்களை கொண்டு வருவதில், முடிவெடுப்பதில் நாம் முதல் காரியமாய் குறைகளை தேடிக் கண்டுபிடிக்கும் புதைபொருள் ஆராய்ச்சி அணுகுமுறையை குழி தோண்டி புதைத்துவிட்டு ப்ரைட் ஸ்பாட்டுகளை தேடி கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாய் செயல்படுவது விவேகம். ஏனெனில், தோல்வியின் எங்கோ ஒரு மூலையில் தான் சிறிய வெற்றிகள் இருக்கும். அந்த வெற்றியை தேடி எடுத்து அதை க்லோன் (Clone) செய்தால் அந்த சிறிய வெற்றியே நமக்கு பெரிய வெற்றிகளுக்கு வழிகாட்டும்.
கம்பெனி மாதாந்திர சேல்ஸ் மீட்டிங். அனைத்து விற்பனையாளர்களும் அந்த மாதத்திற்கான விற்பனை இலக்கை எட்டவில்லை. ஒருவரைத் தவிர. கம்பெனி எம்டி-யாய் லட்சணமாய் நீங்கள் என்ன செய்வீர்கள்? டார்கெட்டை சரியாய் முடித்த விற்பனையாளரை அனுப்பிவிட்டு டார்கெட்டை முடிக்காத விற்பனையாளர்களை காய்ச்சி எடுத்து காயப் போடுவீர்கள். எதற்கு அவர்களுக்கு சம்பளம் தரவேண்டும் என்று அவர்களிடமே கேட்பீர்கள். என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று பழைய குப்பையை பத்து மணி நேரம் கிளறுவீர்கள்.
எதை செய்யவேண்டுமோ அதை அப்படியே தலைகீழாய் செய்கிறீர்கள். நீங்கள் பேச வேண்டியது, ஆராய வேண்டியது விற்பனையை தொலைத்தவர்களை அல்ல. அதை சரியாய் முடித்தவரை. அவர்தான் ப்ரைட் ஸ்பாட். அவர் எப்படி விற்றார். என்ன திறமைகளை பிரயோகிக்கிறார், எப்படி வாடிக்கையாளர்களை அணுகுகிறார், எவ்வாறு பேசி எப்படி விற்பனையை முடிக்கிறார் என்று அவரை குடைவதுதான் சரியான அணுகுமுறை. அவர் செய்வதை மற்றவர்களை செய்ய வைக்கும் முயற்சிகளை தான் நீங்கள் மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் மற்ற விற்பனையாளர்களின் இருளை போக்கும் வெளிச்சம் அந்த ப்ரைட் ஸ்பாட்!
மேனேஜராய் லட்சணமாய் தொழிலில் பிரச்சினைகளை சமாளிக்க முயலும்போது குறைகளை அதிகம் தேடுகிறீர்களா அல்லது அதிலிருக்கும் சிறிய நிறைகளை தேடுகிறீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள். பிரச்சினைகள் பல சமயங்களில் தீர்க்க முடியாதவைகளாக தோன்றும். பைத்தியம் பிடித்துவிடும் போல்தான் இருக்கும். டென்ஷனாகாமல் ப்ரைட் ஸ்பாட்டுகளை தேடுங்கள். பெரிய பிரச்சினை என்பதால் அதை சமாளிக்க அதற்கேற்ற பெரிய தீர்வுகளை தேடவேண்டும் என்று தப்பு கணக்கு போடாதீர்கள். பெரிய பிரச்சினையின் அழுத்தத்திற்குள் அமுங்கி இருக்கும் சிறிய வெற்றிகளை, ப்ரைட் ஸ்பாட்டுகளை வெளிச்சம் போட்டுத் தேடுங்கள். அந்த ப்ரைட் ஸ்பாட்டுகள் பெரிய வெற்றிக்கு உங்களுக்கு பாதையை அமைத்துக் கொடுக்கும்.
எப்படியும் அடுத்த முறையும் ஆபிசிலிருந்து திரும்புகையில் மனைவி காலையில் வாங்கி வரச் சொன்னது மீண்டும் மறக்கத்தான் போகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் விவரித்த கற்பனை கதை உங்கள் வீட்டில் நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் உங்கள் மனைவியையும் இக்கட்டுரையை படித்து ப்ரைட் ஸ்பாட் மேட்டரை பற்றி தெரிந்துகொள்ள சொல்லுங்கள். படித்துவிட்டு இத்தனை நாளாய் ஏன் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி கட்டுரைகளை எனக்கு காட்டவில்லை என்று மனைவி கத்த ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago