வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள வருமானவரி ஆணையரகம் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து வருமானவரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்தின.

இந்த கருத்தரங்கில் தெற்கு ரயில்வே துணைத் தலைவர் எம்.செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். வருமானவரி பிடித்தம்செய்வதன் அவசியம், அதன் தொடர்பான விதிகளின் சாராம்சத்தை வருமானவரி அலுவலர்கள் செந்தில்குமார், ராஜாராமன் ஆகியோர் விளக்கினர்.

வருமானவரி வரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் தலையாய கடமைகளான, டிஏஎன்-ஐ விண்ணப்பித்துப் பெறுதல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வருமானவரி டிடிஎஸ் காலாண்டு படிவங்களை எப்படி தாக்கல் செய்வது என்பதை ஜானகி விரிவாக விளக்கினார். வருமானவரி துறை சார்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட, வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களுக்கான கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களின் கணினிப் பிரதிகள் பகிரப்பட்டன.

மேலும், வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ யூ டியூப்-ல், இடிடிஎஸ் தொடர்பான பல்வேறு வகையான காணொலிகள், வருமானவரி பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில், தெற்கு ரயில்வேயை சேர்ந்த100-க்கும் அதிகமான வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்கள் பங்கேற்றனர். வருமானவரி ஆய்வாளர் குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE