கடவுள் தேவையில்லை என நாத்திகர்கள் சொல்லலாம். ஆனால் வியாபாரிகளுக்கு கடவுள் அவசியம் என்பதை தன்னுடைய For God’s Sake என்னும் புத்தகத்தில் அம்பி பரமேஸ்வரன் கூறியிருப்பார். 30 ஆண்டுகளுக்கு மேலாக விளம்பரத் துறையில் அனுபவம் மிக்க இவருடன் உரையாடிய 2 மணி நேரம், இரண்டு புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைத்தது. பூ கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் இந்த காலத்தில், தற்போதைய விளம்பர உலகம் எப்படி இருக்கிறது, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு விளம்பரங்கள் எப்படி உதவுகின்றன, பிரபலங்களை விளம்பரங்களில் பயன்படுத்தலாமா என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசினார்.
மும்பையில் செட்டிலாகிவிட்ட அம்பி பரமேஸ்வரனின் பூர்வீகம் சென்னை. வித்யா மந்திரில் தொடங்கி, சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். படிக்கும்போதே இன்ஜினீயரிங் தமக்கு சரிபடாது என்பதால், எம்பிஏ படிக்க முடிவு செய்து ஐஐஎம் கொல்கத்தாவில் நிர்வாக படிப்பு முடித்தவர். அதன்பிறகு ரெடிபியூஷன் நிறுவனத்தின் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து பூட்ஸ் என்னும் பார்மா நிறுவனம், யெல்லோ பேஜஸ் ஆகிய நிறுவனங்களில் இணைந்து எப்சிபி உல்கா விளம்பர நிறுவனத்தில் இணைந்தார். 24 ஆண்டுகள் இங்கு பணிபுரிந்தார். இதில் 10 ஆண்டுகள் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். தற்போது பிராண்ட் பில்டிங் டாட் காம் என்னும் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். விளம்பரம், பிராண்டிங் குறித்து எட்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவருடனான உரையாடலில் சுவாரஸ்யமான விஷயங்களை இனி பார்க்கலாம்...
சில தொழிலதிபர்கள் விளம்பரங்களுக்கு செலவு செய்யும் தொகையை விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கொடுத்து விற்பனையை உயர்த்தலாம் என நினைக்கிறார்களே. விளம்பரங்களுக்கு செலவு செய்வது வீணானதா?
எந்தத் தொழிலிலும் உங்களுக்கு போட்டியே இல்லை என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உங்களை விட உங்கள் போட்டியாளர் ஓரிரு சதவீதம் கூடுதல் தொகையை உங்களது விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும்போது, உங்களின் விற்பனை பாதிக்கும். தினமும் புதிய வாடிக்கையாளர்கள் உருவாகி வருவார்கள். அவர்களுக்கு உங்களது பிராண்ட் பெயர் தெரிந்தால் மட்டுமே அந்த பெயரைச் சொல்லி வாங்குவார்கள். இல்லை என்றால் அப்போதைக்கு பிரபலமாக இருக்கும் பிராண்டை வாங்கிவிடுவார்கள்.
வாடிக்கையாளர்களிடம் ஒரு புதிய பொருட்களை காண்பித்தால், இது என்ன நிறுவனம். இதுவரை கேள்விபட்டதில்லையே என்று சொல்வார்கள். உங்கள் தயாரிப்பை வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் மூலமே பிரபலப்படுத்த முடியும். பிராண்டை உருவாக்க உதவுவதும் விளம்பரம்தான். அதே சமயத்தில் அந்த விளம்பரம் மூலம் கிடைக்கும் பயன் என்ன என்பதையும் அளவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் விளம்பரத்துக்கு செலவு செய்கிறீர்கள் என்றால், விளம்பரத்தால் விற்பனை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதை அளவிடுவதற்கு ஒரு பத்து சதவீதமாவது செலவிட வேண்டும். விளம்பரம் முலம் பிராண்ட் குறித்த விழிப்புணர்வு அல்லது விற்பனை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தொடர்ந்து விளம்பரம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஆட்டோமொபைல் துறையை விற்பனையை வைத்து அளவிட முடியாது. ஆனால் எவ்வளவு பேர் அந்த வாகனம் குறித்து விசாரித்துள்ளனர் என்பதை அளவிட வேண்டும்.
எவ்வளவு காலம் விளம்பரம் செய்ய வேண்டும்?
விளம்பரத்துக்கு செய்யும் செலவு தேவையற்றது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விளம்பரம் செய்வதன் மூலம் அந்த பொருளுக்கான தேவை உயரும். அதனால் உற்பத்தி அதிகரிக்கும். பொருளின் உற்பத்தி அதிகரிக்கும்போது செலவு குறையும். நிறுவனங்கள் இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் விளம்பரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டும். ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பிறகு சீரான அளவில் வைத்துக்கொள்ளலாம். விளம்பரத்தை நிறுத்தினால் பிராண்ட் பற்றிய விழிப்புணர்வு குறைந்துவிடும்.
ஒரே பிரபலம், பல நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருப்பதால் பொருள் குறித்த விவரம் மக்கள் மனதில் பதியுமா?
பிரபலங்களை பயன்படுத்துவதால் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய முடியும். ஆனால் அந்த விளம்பரம் வெற்றியடைய வேண்டும் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும். ஒரு பிரபலத்தை பிரபலமாகவே பயன்படுத்துகிறோமா அல்லது பிரபலத்தை ஒரு கதாபாத்திரமாக பயன்படுத்துகிறோமா என்பதில்தான் விளம்பரத்தின் வெற்றி இருக்கிறது. உதாரணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர் விளம்பரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். அதில் அவர் கிராமத்து பெண்ணாகவே நடித்திருப்பார். அப்போது அந்த விளம்பரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது நிறுவனர்களே விளம்பரங்களில் தோன்றுகிறார்களே?
விளம்பரத் துறையில் பிரபலமான வாசகம் ஒன்று இருக்கிறது. விளம்பரம் எடுப்பதற்கு நல்ல கதையை யோசிக்கவேண்டும், கிடைக்கவில்லையா நல்ல இசையை உருவாக்க வேண்டும். அதுவும் கிடைக்கவில்லையா யார் வாடிக்கையாளரோ அவரையே நடிக்க வைக்க வேண்டும். இதுதான் தற்போது நடந்து வருகிறது.
ஒரு நிறுவனத்தில் பிரச்சினை. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மட்டும் நிறுவனர்கள் திரையில் தோன்றினால் வாடிக்கையாளர்களுக்கு அந்த பிராண்டின் மீது மேலும் நம்பிக்கை பிறக்கும். க்ரைஸ்லர் மோட்டார் விற்பனை பாதிக்கப்பட்டபோது நிறுவனத்தின் சிஇஓ லீ அயகோகா விளம்பரத்தில் தோன்றி நம்பிக்கையை விதைத்தார். இதன் மூலம் அந்தக் காரின் விற்பனை அதிகரித்தது. இதுபோல தேவைப்பட்டால் விளம்பரத்தில் நிறுவனர்கள் தோன்றலாம்.
டிஜிட்டல் துறை வளர்ச்சி அடைந்த பிறகும் செய்தித்தாள்களுக்கு தேவை இருக்கிறது என நினைக்கிறீர்களா?
டிஜிட்டல் துறை வளர்ச்சி பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை. நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் கூட இன்னும் டிஜிட்டலை முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. அதனால் குறைந்தபட்சம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு செய்திதாள்களின் தேவை இருக்கும். ஆனால் அவை காகித வடிவமாக இல்லாமல் மொபைல் அல்லது வேறு டிஜிட்டல் வடிவங்களில் இருக்கும்
ஒரு விளம்பரத்தின் கால அளவு என்ன?
முன்பெல்லாம் ஒரு விளம்பரப்படம் எடுத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்வோம். ஆனால் தற்போது ஆண்டுக்கு 25 படங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது. முன்பு தலைமைச் செயல் அதிகாரிக்கு விளம்பரங்களை பார்ப்பதற்கு நேரம் இருந்தது. ஆனால் இப்போது அதற்கான நேரம் இல்லை. அதனால் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் விளம்பரங்களில் தவறான செய்தி, அல்லது நிறுவனத்துக்கு பொருந்தாத தகவல்கள் விளம்பரத்தில் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
திரைப்படத்துக்குள் விளம்பரம் செய்யும் போக்கு இப்போது இருக்கிறதே?
இந்தியில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடிக்கும் போது இந்த போக்கு தொடங்கிவிட்டது. தற்போது ஹிந்தியில் ஒரு படம் தொடங்கும்போதே, படத்தில் இடம்பெறும் கார், மருத்துவமனை மற்றும் செல்போன் உள்ளிட்ட பிராண்டுகளை பிரபலப்படுத்த அந்தந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இந்தியில் வெளியான 3 இடியட் படத்தில் மருத்துவமனை காட்சிக்காக ஒரு மருத்துவமனையுடன் கணிசமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தப் படம் மிகப் பெரிய ஹிட். மருத்துவமனை பல மடங்கு பிரபலமானது.
விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்யலாம்?
இது ஒவ்வொரு துறைக்கும் மாறும். எப்எம்சிஜி துறையை எடுத்துக்கொண்டால் வருமானத்தில் 7 முதல் 15 சதவீதம் வரை செலவு செய்வார்கள். ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால் 3 முதல் 5 சதவீதம் வரை விளம்பர செலவு இருக்கும். வங்கி மற்றும் நிதிச்சேவை துறையை எடுத்துக்கொண்டால் 2 சதவீதம் வரையில் செலவு செய்வார்கள்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago