தற்போதைக்கு செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படாது: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விவரிக்கும் நோக்கில் புதுடெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய தொழில்முனைவு, திறன் மேம்பாடு, மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு பறிபோகும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு தெரியவில்லை.

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக் கூடியது. காரண - காரியங்கள் அறிந்தோ, பகுத்தறிவுடனோ அது செயல்படவில்லை. எனவே, மனிதர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு பறித்துவிடாது.

காரணங்களும் பகுத்தறியும் தன்மையும் பணிகளுக்கு அடிப்படை. அத்தகைய மேம்பட்ட தன்மையுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவு இல்லை. செயற்கை நுண்ணறிவு, வெப் 3 போன்ற தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஒழுங்குமுறைகளை அரசு ஏற்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க, மனிதர்களின் குறுக்கீடுகளைக் குறைக்க பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. தொழில்நுட்பம் வளரும்போது வேலைவாய்ப்பு குறித்த அச்சம் ஏற்படுவது புதிதல்ல" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE