உடனடி தேவையா ரொக்கம் இல்லா பொருளாதாரம்?

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய ரிசர்வ் வங்கி, 2022-23 நிதியாண்டுக்கான 309 பக்க ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை - கடன் தொகை, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு, கரன்சி மேலாண்மை பற்றி விரிவாகப் பேசுகிறது.

இவ்வறிக்கையை ரிசர்வ் வங்கியின் ஆளுநர், அரசுக்கு (நிதித்துறைச் செயலருக்கு) அனுப்பி இருக்கிறார். ஆனால் இது, அரசுக்கு அறிக்கை என்றில்லாமல், அரசின் அறிக்கையாகவே அமைந்திருக்கிறது. உலக நிதிச் சந்தையில் நிலையற்ற தன்மை பின்வாங்கி உள்ளது. சில முன்னேறிய நாடுகளில் வங்கிகள் சந்தித்த தோல்விகளால் நிதி நிலைத்தன்மைக்கு ஏற்பட்ட ஆபத்துகள் தளர்ந்து உள்ளன என்று அந்த அறிக்கை தொடங்குகிறது.

ஆனாலும், 2022-ல் வேகத்துடன் மீண்டு எழுந்த உலகப் பொருளாதாரம் 2023, 2024-ல்தொய்வடையும்; சில நாடுகளின் கடன் நெருக்கடிகள், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் சுணக்கம் ஆகியன பொருளாதார வளர்ச்சியில் உலக மயமாக்கலின் பங்களிப்பை வலுவிழக்கச் செய்யும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உக்ரைன் போருக்குப் பிந்தைய விநியோக இடையூறுகள் காரணமாகப் பிற நாடுகளில் ஏற்பட்டது போன்றே, இந்தியாவிலும் 2022 ஏப்ரலில் பணவீக்கம் அதிகரித்து 7.8% என்ற உச்சம் தொட்டது. அரசு மேற்கொண்ட விநியோக மேலாண்மை நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கி உயர்த்திய ரெப்போ விகிதம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டின் பிற்பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது.

இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம், முந்தைய ஆண்டை விட 6.8% உயர்ந்து, $450 பில்லியன் என்று சாதனை அளவை எட்டியது. அதே சமயம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜிடிபியில் 2.7%ஆக உயர்ந்தது. இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பும் $28.9 பில்லியன் குறைந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், கடன் அட்டை மூலம் பரிவர்த்தனைகள் 30.1%, டெபிட் அட்டை பரிவர்த்தனை 13.2% அதிகரித்துள்ளன. அதே சமயம், கரன்சியின் பயன்பாடும் அதிகரித்தே இருக்கிறது.

2022-23 நிதியாண்டில் சுழற்சியில் இருந்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை, அதன் மதிப்பு கடந்த நிதியாண்டை விடவும் முறையே 4.4% மற்றும் 7.8% அதிகரித்து உள்ளது. குறிப்பாக ரூ.50 நோட்டுகள் புழக்கம் 14% கூடி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது சுழற்சியில் உள்ள கரன்சியின் மதிப்பு ரூ.33,48,228 கோடி; இதில், 50 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மட்டுமே ரூ.25,81,690 கோடி. இந்தாண்டில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் மதிப்பும் 8.1% கூடியுள்ளது; எண்ணிக்கையில் இது 2.6% அதிகம். இவை கூறும் செய்தி என்ன? ரொக்கத்தின் தேவை மங்கிவிடவில்லை என்பதே.

தொழிற்துறை, சேவைத்துறை வெகுவாக வளர்ந்து இருந்தாலும், விவசாயம், மீன் பிடித்தல், கிராம கைத்தொழில்கள் உள்ளிட்ட மரபுத் தொழில்கள் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. நமது நாட்டின் ஆதாரத் தொழில்களான இவற்றில் சாமானியர்களின் பங்களிப்பு பிரதானம் ஆனது. இவர்கள் இன்னமும் ரொக்கம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளையே விரும்புகின்றனர். அன்றாடக் கூலியில் வாழ்க்கையை ஓட்டும் அடித்தட்டு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

ஆனால், ரொக்கப் பரிவர்த்தனைகள் வேண்டாம்; இவை அபாயகர விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று வருமான வரித் துறை எச்சரிக்கிறது. சரியான அறிவுரைதான். ஆனாலும் ரொக்கமாகப் பெரிய தொகையை வைத்துக் கொள்வதற்கு ஏற்கத்தக்க காரணம் அல்லது ஆதாரம் இருந்தால் போதும்.

இந்தியாவில் நாணயங்கள், கரன்சி நோட்டுகள் அறவே இல்லாத பொருளாதாரம் சாத்தியமா? அது நல்லதா? என்பது குறித்து ஆண்டறிக்கை எதையும் விளக்கவில்லை. அரசின் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது. கரன்சி நோட்டுகளின் முக்கியத்துவத்தை மேலோட்டமாகப் பார்ப்பது கூடாது என்கிறது ‘இந்து’ குழுமத்தின் ‘பிசினஸ்லைன்’ நாளிதழ் (3 ஜூன் 2023). சிறு வணிகர்களின் கரன்சித் தேவை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ‘பிசினஸ்லைன்’ விளக்குகிறது.

ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இணைந்து செல்லுதல் இந்திய பொருளாதாரக் கொள்கையில் புதிரான குழப்பத்தைப் பிரதிபலிக்கிறது. ஐயத்துக்கு இடமின்றி டிஜிட்டல் பொருளாதாரத்தில் நன்மைகள் மிக அதிகம். அதுதான் எதிர்காலத்துக்கான பொருளாதாரம். ஆனால் டிஜிட்டல் மயமாக்கலின் வேகம், ரொக்கப் பரிவர்த்தனை மோசம் என்கிற மனநிலை ஏற்கத்தக்கதல்ல.

1979 சுதந்திர தினத்தன்று அப்போதைய பிரதமர் சரண்சிங் கூறுகையில் ‘‘நவீன மயமாக்கல் வேறு; இயந்திர மயமாக்கல் வேறு’’ என்றார். இதையே சற்று மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்துக்குப் பொருத்திப் பார்க்கலாம். நவீனமயம் நல்லதுதான். ஆனால், இயந்திரகதியில் நவீனமயம்..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE