கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்தியர்களுக்கு அனுமதி: ஜி.கே.வாசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் பங்கேற்க இலங்கை அரசிடம் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் போது இந்திய மக்களும், இலங்கை மக்களும் இணைந்து கொண்டாடுவது வழக்கமானது.

இது இந்திய இலங்கை நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமைகிறது. ஆனால் நடப்பாண்டில் நடைபெற இருக்கின்ற கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா என்பது தமிழகம்-ஈழத் தமிழர்கள் இடையேயான கலாச்சார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா மார்ச் 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது

கரோனாவைக் காரணம் காட்டி இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய விழாவில் இந்தியர்களும் கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பங்கேற்க விரும்புகின்றனர். இந்திய இலங்கை நாடுகளின் நல்லுறவின் அடிப்படையில், வருங்கால வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் வகையில் நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும்.

எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE